பாண்டவர்களிடம் தூதுபோன சஞ்சயன் திரும்பி வந்து திருதராஷ்டிர மன்னனிடம் பாண்டவர்கள் சொன்ன விவரத்தைத் தெரிவித்தான்.
விவரம் தெரிய வந்ததும், விதுரரைக் கண்டு பேச விரும்பிய திருதராஷ்டிர மன்னன், வாயில்காப்போனிடம், "நீ சென்று விதுரனை என்னிடம் அழைத்து வா. தாமதிக்க வேண்டாம்'' என்று கட்டளையிட்டான்.
அதன்படி சென்று, வாயில்காப்போன் விதுரரை அழைத்து வந்தான். "அரசே, தங்கள் கட்டளைப்படி விதுரரை அழைத்து வந்துவிட்டேன். உமது பாதங்களைத் தரிசிக்க வாயிலில் அவர் காத்து நிற்கிறார்” என்று தெரிவித்தான்.
"பேரறிஞனான அவனை உள்ளே வரவிடு'' என்று கட்டளையிட்டான் மன்னன்.
உடனே வாயில்காப்போன் திரும்பி, விதுரரிடம் சொன்னதும், விதுரர் திருதராஷ்டிரனைச் சந்திக்க அந்தப்புரத்துக்குள் போனார்.
கவலையுடன் இருக்கும் திருதராஷ்டிர மன்னனைச் சந்தித்துக் கைகூப்பி வணங்கியவாறு, "அரசே, உம்முடைய கட்டளைப்படி விதுரன் இதோ வந்திருக்கிறேன்'' என்று தெரிவித்துக் கொண்டார்.
அப்போது திருதராஷ்டிர மன்னன், ''விதுரா! சஞ்சயன் யுதிஷ்டிரனிடமிருந்து திரும்பிவிட்டான். யுதிஷ்டிரன் தெரிவித்ததை நாளைக்குச் சபையில் சஞ்சயன் சொல்லுவான். யுதிஷ்டிரன் என்ன சொல்லியனுப்பினான் என்பது தெரியவில்லை. எனக்குச் சரியானபடி தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் எரிகிறது. உள்ளமும் உடலும் நொந்து வருந்துகிற எனக்கு எது நன்மை என்பதை யோசித்துச் சொல். நாளைக்குச் சஞ்சயன் வந்து என்ன சொல்லுவானோ என்ற கவலை வேறு எனது உள்ளத்தை உறுத்துகிறது. எது நமக்கு நன்மையைத் தருமோ, மக்களுக்குச் சுகத்தை நல்குமோ அதைக் கூறு'' என்று சொன்னான்.
அதற்கு விதுரர், “அரசே, வலிமையும் போர்ச் சாதனங்களும் இல்லாத நிலையில் பகைவனின் தாக்குதலுக்கு உள்ளானவன், பொருளைப் பறிகொடுத்தவன், காமி, திருடன் ஆகியோரால் தூங்க முடிவதில்லை. இத்தகைய பெரிய குற்றங்களுக்கு ஆளாகி, பிறருடைய பரிகாசத்துக்கு நீர் இலக்காகாமல் இருக்கிறீரா? பிறருடைய செல்வத்தைக் கண்டு பொறாமைப்படாமல் இருக்கிறீரா?'' என்று கேட்டார்.
“விதுரா, அறத்திலிருந்து நழுவாத சிறந்த உண்மைகளை உன்னிடமிருந்து கேட்க விரும்புகிறேன். அறிஞனான நீ உன் கருத்தைத் தெரிவி'' என்று சொன்னான் திருதராஷ்டிர மன்னன்.
அதற்கு விதுரர், ''அரசே, துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் ஆகியவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு எப்படி நீர் அமைதியை எதிர்பார்க்கிறீர்?'' என்று கேட்டுவிட்டு அறவுரைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
''ஆத்மஞானம், சரியான முயற்சி, பொறுமை, அறத்தில் பிடிப்பு ஆகிய இவை, எவனைக் கடமைகளிலிருந்து நழுவச் செய்யவில்லையோ அவனையே பண்டிதன் என்று உலகம் கொண்டாடுகிறது.
''அரசே, ஒரே மரத்திலிருந்து யாகத்துக்குத் தேவையான பல பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. அதேபோல, ஒரே பொருளிலிருந்தே நல்லதும் கெட்டதும் உண்டாகின்றன. பண்டிதன் புகழுக்கு உரிய காரியங்களைச் செய்வான். இகழுக்கு உரிய காரியங்களைச் செய்யமாட்டான். நாத்திகவாதம் பேசமாட்டான், முயற்சியோடு இருப்பான்.
"கோபம், மகிழ்ச்சி, கொழுப்பு, நாணம், அடங்காமை, 'நானே போற்றுதற்கு உரியவன்' என்ற எண்ணம் ஆகியவை எவனைக் கடமைகளிலிருந்து நழுவச் செய்வதில்லையோ அவனே பண்டிதன் ஆவான்.
''செய்து முடித்த பிறகே எவனது காரியத்தையோ ரகசியத்தையோ பிறர் அறிய முடிகிறதோ அவனையே பண்டிதன் என்று உலகம் கொண்டாடுகிறது.
"குளிர், வெப்பம், அச்சம், விளையாட்டு, செல்வம், வறுமை ஆகிய இவை எவனது காரியத்தைத் தடைப்படுத்த முடியாதோ, அவனே பண்டிதன் ஆவான்.
''அறத்தையும் பொருளையும் அனுசரித்து எவனுடைய சிந்தனை செல்லுகிறதோ, எவன் இம்மையின் பொருட்டும் மறுமையின் பொருட்டும் பொருளைத் தேடுகிறானோ, அவனே பண்டிதன் ஆவான்.
''அறிவுத் தேர்ச்சியுள்ளவர்கள் தத்தம் ஆற்றலுக்குத் தக்கபடி காரியங்களைச் செய்ய விரும்புவார்கள்; செய்யவும் செய்வார்கள். எதையும் அவர்கள் அவமதிப்பதில்லை.
''பண்டிதன் சீக்கிரம் அறிகிறான்; நீடித்த காலம் கேட்கிறான்; தெரிந்துகொண்டு காரியத்தில் இறங்குகிறான்; ஆசைவயப்பட்டு இறங்குவதில்லை. பிறர் கேளாமல் தானே முந்திக் கொண்டு யோசனை சொல்வதில்லை. இது பண்டிதனுக்கு உரிய முதன்மையான லட்சணம்.
"அறிவில் தேர்ச்சி பெற்றவர்கள் அடைய முடியாததை அடைய ஆசைப்படுவதில்லை. கெட்டுப் போனதை நினைந்து கவலைப்படுவதில்லை. ஆபத்துக் காலங்களில் மயக்கமடைவதில்லை.
''உறுதியுடன் காரியத்தைத் தொடங்கி நடுவில் அதை விட்டுவிடாதவன், காலத்தை வீணாக்காதவன், மனதை வசப்படுத்தியவன் ஆகியவர்களையே பண்டிதர் என்று கூறுகின்றனர்.
''பண்டிதர்கள் மேன்மையான காரியங்களை விரும்புவார்கள்; நன்மையான காரியத்தை வெறுப்பதில்லை.
''எவன் புகழ்ச்சியால் மகிழ்ச்சி அடைவதில்லையோ, இகழ்ச்சியால் வருந்துவதில்லையோ, கங்கையின் மடுவைப் போல் கலக்கம் இல்லாமல் இருக்கிறானோ, அவனே பண்டிதன்.
''எவன் எல்லாப் பிராணிகளின் தன்மையை அறிந்தவனோ, எவன் எல்லாக் கர்மங்களின் முறையை அறிந்தவனோ, எவன் உபாயத்தை அறிந்தவனோ, மனிதர்களுள் அவனே பண்டிதன்.
"தடையற்ற வாக்குவன்மை, விசித்திரமாகப் பேசும் திறன், ஊகம் உடைமை, காலத்துக்குத் தகுந்த புத்தியுடையவன், சீக்கிரமாகச் சுவடிகளைச் சொல்லக்கூடியவன் ஆகிய பண்புகளைக் கொண்டவனையே பண்டிதன் என்பர்.
சாஸ்திரப் பயிற்சிக்கு ஏற்ற கொள்கையுடையவனும், கொள்கைக்கு ஏற்ற சாஸ்திரப் பயிற்சியுடையவனும், சான்றோர்களின் முறையை மீறாதவனுமே பண்டிதன் என்ற புகழுக்கு உரியவர்.
“செல்வம், கல்வி, அதிகாரம் ஆகியவற்றை அதிகமாகப் பெற்றிருந்தும், எவன் அகந்தை இல்லாமலிருக்கிறானோ, அவனையே பண்டிதன் என்கிறார்கள்.''