இங்கிலாந்து நாட்டில், பட்டப்பகலில் மன்னரின் பூங்காவிலிருந்து ஒரு மானைத் திருடிவிட்டான் ஒருவன்.
அந்தத் திருடனுக்கு அதிகபட்சமான, மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அவன், மன்னனிடம் மன்னிப்பை வேண்டி மனு செய்தான்.
அரசவையில் மன்னனின் முன்பு அவன் நிறுத்தப்பட்டான்.
முதலாம் எட்வர்டு மன்னன் அவனிடம், ''இவ்வளவு அப்பட்டமாகத் திருட்டில் ஈடுபட்ட உனக்கு நான் எதற்காகத் தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அத்திருடன் மன்னனிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு அவனிடம் ஓர் ஆலோசனையையும் கூறினான். அதாவது, தனக்குத் தண்டனையிலிருந்து விலக்கு கிடைத்தால், அதற்குக் கைமாறாக அவன் அரசனின் குதிரைக்குப் பேசக் கற்றுத் தருவதாகக் கூறினான்.
அரசன் அவனது ஆலோசனையைக் கண்டு துணுக்குற்றான். சரியென்று அவனை விடுவித்து, தனது குதிரைகளுக்குப் பொறுப்பாளியாக்கி உத்தரவிட்டான்.
அவையில் நடந்த இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஊர்த்தலைவன். அவன் கூறியது உண்மைதானா என்பதில் சந்தேகம். அந்தத் திருடனைத் தனியே அழைத்தான்.
''என்ன, ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கைதானே உனக்கு?'' ஆச்சரியமாகக் கேட்டார் தலைவன்.
''ஆமாம், தலைவரே!'' என்றான் திருடன்.
''இந்த அதிசயத்தை நிகழ்த்த நீ எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வாய்?'' கேட்டார் தலைவன்.
''ஒரு வருடம், தலைவரே!''
''என்னது? ஒரு வருடமா?''
''தலைவரே! யாருக்குத் தெரியும்?'' நிதானமாகப் பதிலளித்த திருடன், ''இந்த ஒரு வருடக் காலத்தில் மன்னனே இறந்து போகலாம் அல்லது நானே இறந்துவிடலாம் அல்லது குதிரை கூடப் பேசத் தொடங்கி விடலாம்!'' என்றான்.