ஒரு சாதுவும் ஒரு கொள்ளைக்காரனும் ஒரே சமயத்தில் மரணமடைய நேர்ந்தது. இருவரும் ஒரே நேரத்தில் யமனுடைய சபையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
திருடன், தான் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு தகுந்த தண்டனை வழங்கும்படி தலை வணங்கி வேண்டி நின்றான். சாது, தான் செய்த புண்ணியச் செயல்களை எடுத்துக் கூறி, உடனே தனக்காக சுவர்க்க வாயில்களைத் திறந்து விடும்படி கூறினார்.
யமதர்ம ராஜா, திருடனிடம், "இன்று முதல் நீ இந்த சாதுவுக்கு சேவை செய். இவருடைய சத்சங்கத்தால் உன்னிடம் தோன்றியுள்ள இந்த நல்ல மாறுதல் மேலும் பிரகாசமடையும்" என்றார். திருடன் அதற்கு மகிழ்வுடன் ஒப்புக் கொண்டான்.
ஆனால் சாதுவோ, அந்த ஆணையை மறுத்து, ''இவன் சகவாசம் கிடைத்தால் நானும் கீழ் நிலைக்குப் போய்விடுவேன். அதனால் உங்கள் தீர்ப்பு எனக்குப் பிடிக்கவில்லை'' என்றார்.
யம தர்ம ராஜா கம்பீரமாகச் சொன்னார், ''அப்படியென்றால் நீரே இந்தத் திருடனுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது 'நான் உயர்ந்தவன்' என்ற அகம்பாவம் உங்களிடமிருந்து நசியும்'' என்றார்.