காட்டில் இருந்த சிங்கம் சாப்பிடுவதற்கு, மற்ற மிருகங்கள் இறைச்சி கொண்டு வந்து தர வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. அதனால் அந்தச் சிங்கம், தன் உணவுக்காக எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தது. அதனால் சிங்கம் நன்றாகப் பெருத்து கொழுத்துவிட்டது. அத்துடன் அது எழுந்து கொள்ளவும் கஷ்டப்பட்டது.
ஒரு நாள் சிங்கம் நரி ஒன்றிடம், "என் உடல் பருத்துவிட்டதால், எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. என் உடல் இளைக்க ஏதாவது ஒரு நல்ல வழி சொல்'' என்று கேட்டது.
அதற்கு நரி, "நான் உங்களுக்கு ஒரு மருந்து சொல்கிறேன். அது, நீங்கள் தினமும் விடியற்காலையில் எழுந்து, அப்போது விழும் பனித்துளிகளைச் சேகரித்துத் தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள். அவ்விதம் நீங்கள் செய்தால், உங்கள் உடல் இளைத்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்!” என்றது.
பனித்துளிகளைச் சேகரித்துக் கொண்டுவந்து தனக்குக் கொடுக்கும் பணியைச் சிங்கம் முயல்களிடம் ஒப்படைத்தது.
தினமும் முயல்கள் கொண்டு வந்து கொடுத்த ஒரு டம்ளர் பனித்துளிகளைச் சிங்கம் குடித்து வந்தது. ஆனால் சிங்கத்தின் உடல் என்னவோ இளைக்கவில்லை.
ஒரு மாதத்திற்குப் பிறகு சிங்கம் நரியிடம், "நீ சொன்னபடி, நான் தினமும் ஒரு டம்ளர் பனித்துளிகள் குடித்துக்கொண்டுதான் வருகிறேன். ஆனால் என் உடல் என்னவோ இளைக்கவில்லை, ஏன்?” என்று வினவியது.
அதற்கு நரி, "பனித்துளிகளைச் சேகரிக்கும் பணியை முயல்களிடம் கொடுக்காமல் நீங்களே விடியற்காலையில் எழுந்து அவற்றைச் சேகரித்து, ஒரு டம்ளர் குடித்தால்தான் நீங்கள் விரும்பியபடி உங்கள் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்” என்று கூறியது.
சிங்கம் மறுநாள் முதல் அதிகாலையில் எழுந்து, தானே பனித்துளிகளைச் சேகரித்துக் குடித்து வந்தது. இவ்விதம் ஒரு மாதம் ஆயிற்று. சிங்கத்தின் உடல் இளைத்து நல்ல ஆரோக்கியம் பெற்றது.
அதனால் சிங்கம் நரியிடம், "நீ கூறியபடி நான் ஒரு மாதம் மருந்து சாப்பிட்டேன். அதனால் இப்போது என் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியது.
அதற்கு நரி, "ராஜாவே! நான் கூறியது உண்மையில் மருந்து இல்லை! உடற்பயிற்சியைத்தான் அப்படி உங்களுக்கு ஒரு மருந்துபோல் கூறினேன். உங்கள் உடல்நலம் தேறியதற்குத் தினமும் நீங்கள் சாப்பிட்ட ஒரு டம்ளர் பனித் துளிகள் காரணமல்ல.
"உங்கள் உடல்நலம் தேறியதற்குக் காரணம், விடியற்காலையில் எழுந்து நீங்கள் இங்கும் அங்கும் சென்று பனித் துளிகளைச் சேகரித்தீர்கள்; அந்த உடற் பயிற்சியால்தான் நீங்கள் இப்போது ஆரோக்கியம் பெற்றீர்கள்” என்றது.