ஒரு காலை வேளை. அந்தக் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார் ஒரு முதியவர். அப்போது ஒரு பெண் தன் முன்னே செல்வதைக் கண்டார். அவள் செல்கையில், அவ்வப்போது குனிந்து, அலைகளால் கரையில் அடித்துவரப்பட்ட நட்சத்திர மீன்களை எடுத்து மீண்டும் கடலுக்குள் எறிந்ததைப் பார்த்தார்.
அவளிடம் சென்று, ''எதற்காக அம்மா இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார். அவள் இவரிடம், ''பாவம், இந்த நட்சத்திர மீன்கள்! அலைகளின் வேகத்தால் கரையில் ஒதுங்கும் இவை வெயில் ஏற, ஏற இறந்து போய்விடும். எனவே அவற்றை மீண்டும் கடலில் எறிந்து காப்பாற்ற நினைத்தேன்'' என்றாள்.
இதைக் கேட்டு சிரித்த முதியவர் அவளிடம், ''அம்மா! இந்தக் கடற்கரை, பல மைல்கள் தூரத்திற்குப் பரவியுள்ளது. பல லட்சம் நட்சத்திர மீன்கள் இங்கு கரையில் அடித்துத் தள்ளப்படுகின்றன. உன் செயல் எப்படி இவற்றின் வாழ்வில் மாறுதலை ஏற்படுத்திவிடும்'' என்று நக்கலாகக் கேட்டார்.
அப்பொழுது மீண்டும் குனிந்து எடுத்துத் தன் கையில் வைத்திருந்த ஒரு நட்சத்திர மீனைக் கடல் நீரில் எறிந்தபடியே, ''இதோ, இதன் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதே! அது போதாதா?'' என்று பதிலளித்தாள்.
கடற்கரை பெரியதாக இருக்கலாம். அங்கு கோடிக்கணக்கான நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கலாம். ஆனால் ஒரு மீனைத் தூக்கிக் கடலில் எறிவதன் மூலம் ஒரு வாழ்வு காக்கப்படுகிறது. அதே போன்று உலகப் பிரச்னைகள் பலப்பல. நம் சக்திக்கு ஏற்றபடி ஒன்று தீர்க்கப்பட்டாலே ஒன்று குறைந்ததாகத்தானே பொருள்.
உங்களால் அந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்த முடியும்!