தன் நாட்டில் தலைசிறந்த சிற்பியைக் காண எண்ணினான் ஓர் அரசன்.
இரு தேர்ந்த சிற்பிகள் அரசனிடம் வந்தனர்.
அவர்களைச் சோதித்த பிறகுதானே அவர்களில் யார் சிறந்தவர் என அறிய முடியும்? அதனால் தனது அரண்மனையின் எதிரும் புதிருமான இரு சுவர்களில் அவர்களை ஒரு சிற்பம் வடிக்கச் சொன்னான்.
ஒருவர் பணியை அடுத்தவர் பார்க்க இயலாவண்ணம் சுவர்களுக்கிடையே ஒரு திரையால் மறைக்கச் செய்தான்.
பல மாதங்கள் சென்றன.
அரசர் தங்கள் திறனைப் பார்வையிடலாமென இருவரும் அரசனிடம் கூறினர்.
இரு சிற்பங்களுமே திரையால் மூடப்பட்டிருந்தன.
ஒரு திரையை நீக்கியதும் மிகவும் அழகானதொரு சிற்பம் தோன்றியது.
அனைவரும் அதனைப் புகழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பிறகு எதிரே இருந்த திரை விலக்கப்பட்டது.
அச்சுவற்றில் சிற்பம் ஒன்றும் செதுக்கப்படவில்லை.
ஆனால் சுவர் என்னவோ மிகவும் பளபளப்பாக எதிரில் உள்ள சிற்பத்தை அப்படியே பிரதிபலிக்கூடிய அளவில் மெருகூட்டப்பட்டு இருந்தது.
அதில் தெரிந்த சிலையின் உருவமோ சிலையையும் விடவும் அற்புதமாகத் தெரிந்தது.
அந்தச் சுவற்றை அவ்வளவு அக்கறையுடன் மெருகேற்றியிருந்தார் அச்சிற்பி.
அந்தச் சிற்பிக்கே அரசனின் பரிசு கிடைத்தது.
நாம் நமது மனதில் கடவுளை உருவகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
நாம் செய்ய வேண்டியது நம் மனதிலுள்ள அழுக்குகளை நீக்கி நிர்மலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுதான் நமது வேலை கடமையும் கூட. இறைவன் எப்போதும் இருக்கிறான். நம் மனமானது நிர்மலமாக இருந்தால் இறைவனின் திருவுருவமும் அதில் பளிச்சென்று தெரியும்.