பிரெஞ்சுத் துருப்புகள் அப்போது ஜெர்மனியில் முகாமிட்டிருந்தன. அவர்களிடம் நிறையக் குதிரைகள் இருந்தன. அவைகளுக்கெல்லாம் ஆகாரம் தேவைப்பட்டது. புது இடம் வேறு. என்ன செய்வதென்று யோசித்தார் படைத்தலைவர்.
ஒரு படைப்பிரிவின் அதிகாரியிடம் குதிரைகளுக்குத் தேவையான புல்லைக் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.
உடனே அந்த அதிகாரி தமது படைவீரர்களுடன் புல்லைத் தேடிப் புறப்பட்டார்.
ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அங்கே மரங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பகுதி ஒரு சிறிய பள்ளத்தாக்கு. சுற்றிலும் குன்றுகள். சிறிது தூரத்தில் ஒரு சிறு குடிசை தெரிந்தது.
உடனே படை வீரர்கள் எல்லோரும் அங்கே விரைந்தார்கள்.
அந்த அதிகாரி தமது படைவீரர்களுள் ஒருவரிடம் அந்தக் குடிசையின் கதவைத் தட்டச் சொன்னார். தட்டப்பட்டதும் கதவு திறந்தது.
குடிசையில் இருந்து வெள்ளைத் தாடியோடு ஒரு பெரியவர் வெளியே வந்தார்.
படைத்தலைவர் அவரிடம், ''ஐயா, எங்கள் குதிரைகளுக்குப் புல் தேவைப்படுகிறது. இந்தப் பகுதியில் நல்ல புல் எங்கே கிடைக்கும்? நீங்கள் இடத்தைக் காட்டினால் நாங்களே அறுத்துக் கொள்கிறோம்” என்றார்.
''சரி, என்னுடன் வாருங்கள்'' என்று கூறிப் பெரியவர் புறப்பட்டார்.
காடுமேடு என்று நீண்ட தூரம் பெரியவர் போய்க் கொண்டிருந்தார். படைவீரர்களும் அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படி நடந்திருப்பார்கள்.
போகும் வழியில் ஓர் இடத்தில் புல் நிறைந்திருந்தது. படைத்தலைவர் உடனே, “இது போதுமே, இந்த இடத்திலேயே நாங்கள் புல் அறுத்துக் கொள்கிறோம்'' என்றார்.
உடனே பெரியவர், "இங்கே வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். தயவு செய்து பொறுமையுடன் வாருங்கள்” என்றார்.
மீண்டும் பெரியவர் நடக்க ஆரம்பித்தார். படைவீரர்கள் சலிப்புடன் தொடர்ந்தார்கள்.
புல் நிறைந்த பல இடங்கள் மீண்டும் வந்தன. இருந்தாலும் அந்தப் பெரியவர் 'அவையெல்லாம் வேண்டாம்' என்று கூறி, கடைசியில் ஒரு புல் நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கே போனதும் பெரியவர், ''இந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு புல் வேண்டுமானாலும் அறுத்துக் கொள்ளலாம்'' என்றார்.
உடனே வீரர்கள் புற்களை அறுத்து மூட்டை கட்டிக் கொண்டுப் புறப்பட்டார்கள்.
புறப்படும் சமயம் அந்தப் படைத்தலைவர் பெரியவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்:
"பெரியவரே, ஏன் எங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்தீர்கள்? வழியில் ஏராளமாகப் புல் நிலங்கள் இருந்தனவே. அங்கெல்லாம் நாம் அறுத்திருக்கலாமே?''
அதற்கு அந்தப் பெரியவர் அமைதியாக, ''உண்மைதான் வீரர்களே. வழியில் நிறைய நிலங்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் எனக்குச் சொந்தமில்லையே. இந்த நிலம் மட்டும் தான் என்னுடையது'' என்று கூறியதும் படை வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றார்கள்.