ஸ்ரீராமாயணத்தை எழுதிய வால்மீகியை அன்று ஸ்ரீஆஞ்சநேயர் காண வந்தார்.
வால்மீகி பக்தியுடன் அவரை வணங்கி, “ஆஞ்சநேயரே, ஸ்ரீராமபிரானின் சரித்திரத்தைக் கூறும் காவியத்திற்கு ஸ்ரீராமாயணம் என்று பெயரிட்டு ஏழு காண்டங்களாகப் பிரித்துள்ளேன். அதில் ஒரு காண்டத்திற்கு ஆஞ்சநேய காண்டம் என்று தங்களது திருநாமத்தைச் சூட்டியுள்ளேன்" என்று கூறினார்.
முனிவரின் மொழி கேட்டு வாயுபுத்திரன் ஒரு கணம் திகைத்தார். ‘ஸ்ரீராமனின் புகழ் சேர்க்கும் ராமாயணத்தில் தம் பெயரையும் புகுத்துவது ராமருக்குச் செய்யும் துரோகம் அல்லவா...?’ என்று எண்ணினார்.
அதனால் உடனே அவர், “மகரிஷி, இது பெரும் அபச்சாரம். என் பிரபுவின் திருவடியில் தஞ்சம் கிடக்கும் எனக்கு இந்தச் சிறப்பு வேண்டாம். தாங்கள் அருள் கூர்ந்து அந்தக் காண்டத்தின் தலைப்பை மாற்றிவிடுங்கள்" என்று விண்ணப்பித்தார்.
மகரிஷி ஒரு கணம் மௌனமானார். பின்னர், “வாயுபுத்திரரே! செயற்கரிய செயல்களைச் செய்து சீதையையும் ராமரையும் சேர்த்து வைத்த தங்களது பெருமைகளைச் சொல்லும் சுந்தரமான காண்டத்திற்கு வைத்துள்ள ஆஞ்சநேய காண்டம் என்ற தலைப்பை சுந்தர காண்டம் என்று மாற்றிவிடுகிறேன்! தங்களுக்கு இதில் திருப்திதானே?" என்று வினவினார்.
ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். முனிவரைப் பணிந்து புறப்பட்டார். சில நாட்கள் கழித்து ஆஞ்சநேயர் தமது தாயாரான அஞ்சனா தேவியைத் தரிசிக்கச் சென்றார்.
மகனைக் கண்ட அஞ்சனாதேவி மகிழ்ச்சி பொங்க, “என் ஆருயிர் செல்வா! சுந்தரா! வா! உன்னைப் பார்த்து அநேக நாட்கள் ஆயிற்று!" என்றார்.
மாருதிக்கு ஒரே அதிர்ச்சி! அதை வெளிக்காட்டாமல், “அம்மா, சுந்தரா என்று எதற்காக என்னை அழைத்தீர்கள்?" என்று வினவினார்.
“கண்ணே, உனக்கு சுந்தரன் என்று ஒரு பெயரும் உண்டு" என்றாள் அஞ்சனாதேவி.
‘இத்தனை நாட்களாக இது எனக்குத் தெரியாதே. ஆனால் எங்கோ வனத்தில் வசிக்கும் வால்மீகி இதை அறிந்து வைத்திருக்கிறார். அது எப்படி?’ என்று முணுமுணுத்துக் கொண்டார் ஆஞ்சநேயர்.
“என்ன சொல்கிறாய் மகனே?" என்று கேட்டபடியே, ஆஞ்சநேயரை அன்போடு அணைத்துக் கொண்டாள் அஞ்சனா தேவி!
தாயாருடன் மகிழ்ச்சியாகப் பல நாட்கள் இருக்க வேண்டும் என்று வந்திருந்த ஆஞ்சநேயர், ‘வால்மீகி மகிரிஷியிடம் தம் பெயர் சுந்தரன் என்பது அவருக்கு எப்படித் தெரிந்தது என்பதைக் கேட்க வேண்டும்’ என்று ஆதங்கப்பட்டார்.
தாயுடன் தங்கியிருக்க மனம் கொள்ளா நிலையில் முனிவரைக் காண விரைந்தார்.
வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த வாயுபுத்திரன் அவரைக் கண்டதும், “முனிவரே, எனக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதைத் தாங்கள் தெரிந்து கொண்டு தான் ராமாயணத்தின் ஒரு பகுதிக்கு சுந்தர காண்டம் என்று தலைப்பைச் சூட்டியுள்ளீர்கள். நீங்கள் இந்த எளியவனிடம் இது பற்றி ஒன்றுமே கூறவில்லையே!" என்று குறைபட்டுக் கொண்டார்.
வால்மீகி புன்னகையுடன், “ஆஞ்சநேயரே! ராமாயணத்தில் அந்தக் குறிப்பிட்ட காண்டத்திற்கு தங்களது நாமத்தையே சூட்ட வேண்டும் என்பது அந்த சீதாதேவியின் அருள் உள்ளம்!
“தேவியார் ராமருடன் சேர்ந்து வாழ்வதற்குத் தாங்கள் செய்த தியாகங்கள் மகத்தானவை. அந்தக் காண்டம் முழுவதும் தங்களது பிரபாவமே பொங்கிப் பெருகுகிறது. இதைப் பாராயணம் செய்பவர்கள் ஸ்ரீசீதாராமனின் பேரருளால் சகல சௌபாக்கியங்களும் அடைவர்" என்று உணர்ச்சியுடன் கூறினார்.
முனிவரின் மொழி கேட்டு சீதா தேவியை நினைத்து மாருதி வணங்கினார்.
பிறகு ‘ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்’ என்று அனுமன் ஜபிக்கத் தொடங்கினார்.
சுந்தரம் என்றாலே அழகு என்று பொருள். சுலோகங்களின் அழகு, சீதை - ராமன் ஆகியோரது அழகு, இலங்கையின் அழகு என்று பல வகையான ‘அழகான’ வர்ணனைகள் சுந்தர காண்டத்தில் இடம் பெறுகின்றன. சுந்தரம் என்றால் வானரம் என்றும் பொருள் உண்டு.
“ராமாயணம் எனும் மாலையில் நடுநாயகமான ரத்தினம் போல் ஆஞ்சநேயர் விளங்குகிறார்" என்று சுந்தர காண்டம் துவங்குகிறது.