பேரரசர் அக்பர் அரசியாரின் அந்தப்புரத்திற்குச் சென்றார். அப்பொழுது அரசியார் தம் தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அவர்கள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்தது.
அக்பர் அங்கு நிற்பது அரசிக்குத் தெரிந்தது. முன்னறிவிப்பின்றி இந்த நேரத்தில் அவர் வந்ததை அரசியார் விரும்பவில்லை.
கேலி செய்ய நினைத்த அவர் " பெரிய முட்டாளே! வாருங்கள்" என்று சொல்லிச் சிரித்தார்.
அக்பர் எதுவும் பேசாமல் அரண்மனைக்குத் திரும்பினார்.
"ஏன் என்னைப் பெரிய முட்டாள் என்று அரசி அழைத்தார்? என்று குழம்பியபடியே இருந்தார்.
அப்பொழுது அமைச்சர் பீர்பால் அங்கு வந்தார். " பெரிய முட்டாளே வாரும்." என்று அவரை அக்பர் அழைத்தார்.
" ஆமாம்.பெரிய முட்டாளே" என்று சொல்லிச் சிரித்தார் பீர்பால்.
கோபத்தால் துடித்த அக்பர் " என்னைப் பெரிய முட்டாளே என்று அழைத்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் உமக்கு மரண தண்டனை அளிக்கப்படும் " என்று கத்தினார்.
"அரசே கோபமடையாதீர்கள், ஒருவன் ஐந்து காரணங்களால் முட்டாள் என்று அழைக்கப் படுகிறான்." என்றபடி அக்பரைப் பார்த்தார்.
" என்னென்ன காரணங்கள்? " என்று கேட்டார் அக்பர்.
" முன்னறிவிப்பின்றியோ அல்லது தான் வந்ததைத் தெரிவிக்காமலோ இருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்பவன் முதல் முட்டாள்."
இதைக் கேட்ட அக்பரின் கோபம் சிறிது குறைந்தது.
மற்ற நான்கு முட்டாள்கள் யார்? என்று கேட்டார்.
" இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது அழைக்காமலேயே குறுக்கிட்டுப் பேசுபவன் இரண்டாவது முட்டாள்.
ஒருவர் பேசி முடிக்கும் முன்பு குறுக்கிட்டுப் பேசுபவன் மூன்றாவது முட்டாள்.
முட்டாளைத் தேடிச் சென்று அவனுடன் பழகுபவன் நான்காவது முட்டாள்."
அமைதிக்கு வந்த அக்பர் "அந்த ஐந்தாவது முட்டாள் யார்?" என்று கேட்டார்.
"முட்டாளை வரவேற்று அவனுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பவன் ஐந்தாவது முட்டாள்.
இதைக் கேட்ட அக்பர் தன்னை மறந்து சிரித்தார்.