பக்தர் ஒருவர் தினமும் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
ஒரு சமயம் அவருக்கு ஏதோ சலிப்பு ஏற்பட்டு, 'ஒரு வாரம் கோயிலுக்குப் போகாமலிருந்தால் என்ன குடி மூழ்கிவிடும்?' என்ற எண்ணம் தோன்றி கோயில் பக்கமே போகாமல் இருந்தார்.
ஒரு வாரம் கழித்து அந்தப் பக்தர் கோயிலுக்குப் போனார்.
அங்கு போன உடனே கோயிலில் ஒரு காட்சியைக் கண்டு அவர் விக்கி விக்கி அழ ஆரம்பித்தார். ஆம், அப்படி அவர் அங்கு கண்ட காட்சிதான் என்ன...?
ஒரு வாரமாக, ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் கோயிலுக்கு நடனமாட வராத தேவதாசியை அரசர் அப்போது சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார். "ஏன் கோயிலுக்கு வரவில்லை? ஏன் கோயிலுக்கு வரவில்லை?" என்று கேட்டு அவளை அரசர் அடித்தார்.
அவளைக் கண்டு, அவள் அடிபடும் நிலையைக் கண்டுதான் இறைபக்தர் அழுகிறார் என்று அரசர் நினைத்து, "தேவதாசியை அடித்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பக்தர், "உங்கள் கடமையில் நான் குறுக்கிடவில்லை. நீங்கள் அவளைக் கோயிலுக்கு வராமல் இருந்த காரணத்திற்காக அடித்த அடி என் நெஞ்சில்பட்டு, அதுபோல் என்னையும் 'ஏன் ஒரு வாரமாகக் கோயிலுக்கு வரவில்லை!' என்று அடிப்பவர்கள் இல்லையே என்று தான் அழுகிறேன். அப்படி ஒருவர் இருந்தால், நான் ஒரு வாரமாகக் கோயிலுக்கு வராமல் இருந்திருக்க மாட்டேன்!" என்று சொல்லி மேலும் விக்கி விக்கி அழுதார்.