ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான்.
அவனுக்கு அவன் நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் ஏசிக்கொண்டே இருப்பான்.
அவனது உயிரைக் கொண்டுபோவதற்கு யமன் வரப்போகிறான் என்பது மகானுக்கு முன்னதாகத் தெரிந்தது.
அதை அவர் அந்த சீடனிடம் கூறி எச்சரிக்கையாக இருக்கும்படி பணித்தார்.
மற்ற சீடர்களையும் அந்தப் போக்கிரி மாதிரியே உடை அணிவித்து அவர்களுடன் அவனையும் படுத்துறங்க ஏற்பாடு செய்தார்.
உயிர் போக வேண்டிய நாளன்று இரவு யமதூதர்கள் வந்து, அதில் யார் அந்தப் போக்கிரி? என்று இனம் தெரியாமல் விழித்தார்கள்.
ஒரு யமதூதன் தனது சாமர்த்தியத்தால் அவனைக் கண்டுபிடிக்க நினைத்து, 'எல்லாம் நன்றாகத்தான் வேஷம் போட்டிருக்கிறான். ஆனால் ஒரே ஒரு தவறு மட்டும் செய்துவிட்டான்'' என்ற உரக்கக் கூவினான்.
பயத்தால் விழித்துக் கொண்டிருந்த போக்கிரி மட்டும் எழுந்து. "என்ன அந்தத் தவறு?'' என்று யமதூதனைப் பார்த்துக் கேட்டான்.
''உன் நாக்கு உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இதுதான் தப்பு” என்று யமதூதன் கூறி அந்தப் போக்கிரியை இழுத்துச் சென்றான்.