கவிச்சக்கரவர்த்தி கம்பர் வீட்டில் ஒரு விழா. அதற்கு ஊரே திரண்டு வந்திருந்தது.
கம்பரின் மிகவும் நெருங்கிய நண்பரான சடையப்ப முதலியாரும் வந்திருந்தார்.
வந்தவர் கூட்டத்தில் ஒரு பக்கத்தில் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து கொண்டார்.
இதைக் கம்பர் கவனிக்கவில்லை. கம்பரது மனைவி பார்த்து விட்டாள்.
உடனே அவள் தன் கணவரை அணுகி, ''அண்ணா வந்து ஒதுக்குப்புறமாக உட்கார்ந்திருக்கிறார்; அவரை அழைத்து வைக்க வேண்டிய இடத்திலே உட்கார வையுங்கள்'' என்று சொன்னாள்.
அதற்குக் கம்பர், "இப்படி இவரை இன்று சபைக்கு நடுவே வீற்றிருக்க விட்டால் மட்டும் போதுமா? அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நான் மறக்க மாட்டேன்" என்று சொன்னார்.
இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதானோ என்னவோ, பின்னர் தாம் ராமாவதாரம் பாடும்போது, தன்னை ஆதரித்த அந்த வள்ளல் சடையப்பரைக் காவியத்திலே பத்து இடங்களில் கொலு வீற்றிருக்கச் செய்து விடுகிறார் கம்பர்.
உதாரணத்திற்கு ஒன்று: ராம லட்சுமணர்கள் விசுவாமித்திரரோடு மிதிலை சென்று தங்குகிறார்கள்.
அன்று பௌர்ணமி, இரவில் நிலவொளி பரந்து வீசுகிறது. எப்படி நிலவொளி பரந்திருக்கிறது? சடையன் புகழ்போல் எங்கும் பரந்திருக்கிறது என்று கம்பர் உவமையாகக் கூறுகிறார்.