அமூதி என்ற ஞானி ஒருவர் இருந்தார்.
அவரிடம் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட, நிறைய மாணவர்கள் சீடர்களாகச் சேர்ந்து, பாடம் கற்று வந்தார்கள்.
ஒரு நாள் அவர் தன் சமையல்காரனிடம் சாணி கலந்த அழுக்கு நீரை, தன்னிடம் படிப்பு கற்றுக்கொள்ள வந்திருக்கும் சீடர்களின் மீது கொட்டும்படி கூறினார்.
நாற்றம் பிடித்த அந்த அழுக்கு நீரில் நனைந்த அந்தச் சீடர்கள் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதினார்கள்.
அவர்கள் தங்களுக்கு அவமானம் இழைத்த அந்த சமையல்காரனிடம் சண்டை போடத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த அமூதி அவர்களைப் பார்த்து, ''நீங்கள் மரியாதையைத் தேடிக்கொண்டு இங்கு வந்திருப்பதாக முதலில் ஏன் என்னிடம் சொல்லவில்லை? நீங்கள் அனைவரும் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் இங்கு வந்திருப்பதாக என்னிடம் கூறினீர்கள்.
“உங்களிடம் எவ்வளவு பேர்கள் அறிவைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டறியத்தான் நான் இந்த சோதனையை நடத்தினேன். இதில் நீங்கள் அனைவரும் தோற்றுவிட்டீர்கள். உங்களுக்கு மரியாதையைக் கொடுத்து உங்களுடைய அறிவை வளர்க்க நான் ஒன்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை.
"மற்றவர்களுடைய அறிவை வளர்க்கும் முயற்சியில் நான் என் முழு நேரத்தையும் பயன்படுத்தி வருகிறேன். உங்களிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்ப்பவர்கள்தான், நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதையை உங்களுக்குக் கொடுப்பார்கள். நீங்கள் மரியாதையை விரும்பினால், உங்களிடமிருந்து லாபத்தை எதிர்பார்க்கும், கடைக்காரர்களைத் தேடிச் செல்லுங்கள்" என்று கூறினார்.