ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.
அவனிடம் ஓர் அபூர்வக் கல் பதித்த மோதிரம் இருந்தது.
அதை அவன் அரசனிடம் எடுத்துச் சென்று அதற்குத் தகுந்த மதிப்புப் போடும்படி சொன்னான்.
அரசன் அதை வாங்கி அதன் பிரகாசத்தைப் பார்த்துத் திகைத்துவிட்டான்.
அரசன், தன் மந்திரிகளை அழைத்து அந்த மோதிரத்துக்கு மதிப்புப் போடும்படி சொன்னான்.
மந்திரிகள் அனைவரும் அந்த மோதிரத்தைப் பார்த்து, “அதில் பதித்திருக்கும் கல் மிகவும் அபூர்வமானது, விலை மதிப்பில்லாதது, அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்'' என்று பாராட்டினார்கள்.
அரசன் அந்த மோதிரத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் போட்டான். என்ன ஆச்சரியம்! மோதிரத்தில் உள்ள கல்லைக் காணவில்லை.
அரசன் அனைவரையும் நோக்கி, “பார்த்தீர்களா? மோதிரத்தில் இருந்தது கல் இல்லை. அது கற்கண்டு. அதை வெகு சாதுர்யமாக வெட்டித் தேய்த்து மெருகிட்டு மோதிரத்தில் பதித்திருக்கிறார்கள்'' என்றான்.
அது கேட்டு வியாபாரியும், மந்திரிகளும் அசந்தே போனார்கள்.
அப்பொழுது, "ஆமாம்! அது கற்கண்டுக் கட்டி என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என மந்திரிகளில் ஒருவர் கேட்டார்.
"நான் மோதிரத்தைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஈ கல்லை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதனால்தான் நான் சந்தேகப்பட்டு நீரில் போட்டேன்'' என்றான் அரசன்.
'திருட்டுத்தனமாக மோதிரத்தை அரசனிடம் கொடுத்துவிட்டு, பணத்தை வாங்கிப் போய்விடலாம்' என்று நினைத்துக் கொண்டு வந்த வியாபாரிக்கு அரசன் தக்க தண்டனை கொடுத்து அவனைத் திருத்தினான்.