ஜப்பான் நாட்டில் நொபுநாகா என்ற சிற்றரசர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரிய வீரர், சிறந்த சாமர்த்தியசாலி.
அவரிடம் படைபலம் அப்படி ஒன்றும் அதிகமாக இல்லை. என்றாலும் அவர் பல போர்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
அவர் ஒரு சமயம், எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
பகையரசனிடம் பெரிய படையிருந்தது. எனவே நொபுநாகாவின் படைத்தளபதி, துணைத் தளபதிகள், படை வீரர்கள் ஆகியோர், 'நம்மிடம் வீரர்களின் எண்ணிக்கை குறைவு. எதிரியிடம் வீரர்கள் அதிகம். இந்த நிலையில் நாம் பகைவனிடம் போர் தொடுத்தால் நமக்குத்தான் தோல்வி ஏற்படும்' என்று நினைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் தங்கள் கருத்தைத் தயங்கித் தயங்கி நொபுநாகாவிடம் கூறினார்கள்.
அதற்கு நொபுநாகா, "சரி ....'எதிரி அரசனுடன் போரிடுவதா, வேண்டாமா?' என்று இப்போது நாமே முடிவு செய்ய வேண்டாம். ஒரு காரியம் செய்வோம்; நாளைக் காலையில் நாம் அனைவரும், புத்தர் கோயிலுக்குச் செல்வோம். அங்கு பிரார்த்தனை முடித்து வெளியே வந்து, ஒரு பொற்காசைச் சுண்டி மேலே வீசுவோம். பூ விழுந்தால், 'தோற்றுவிடுவோம்.' தலை விழுந்தால், 'வெற்றி பெறுவோம்' என்று கொள்வோம்... சரியா?” என்று கேட்டார்.
அவரது யோசனையை ஏற்ற அனைவரும் மறுநாள் புத்தர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
நொபுநாகா பொற்காசைச் சுண்டியதில் மேலே சென்ற அக்காசு தரையில் கீழே விழுந்தது.
படைத் தளபதியும், மற்றவர்களும் ஆவலுடன் சென்று பார்த்ததில் தலைப்பகுதி விழுந்திருந்தது! எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
'நமக்கே வெற்றி!' என்ற எண்ணத்துடன், எல்லோரும் உற்சாகமாகப் போரிட்டதில் அவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
வெற்றி விழாவின்போது தளபதி, " 'நாம் போரில் வெற்றி பெற வேண்டும்' என்ற விதி முடிவை யாரால் தடுக்க முடியும்? நமது வெற்றியைப் பொற்காசுதான் தீர்மானித்தது” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
அப்போது நொபுநாகா, ரகசியமாக ஒரு பொற்காசைப் படைத் தளபதியிடம் கொடுத்தார்.
அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலைதான் இருந்தது!
அவர்களின் வெற்றிக்கு, 'நாம்தான் வெற்றி பெறுவோம்!' என்ற மன உறுதிதான் காரணம்.