உண்மையைத் தேடி அலையும் ஒரு மனிதர், பல வருட தேடலுக்குப் பிறகு ஒரு குகைக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டார்.
அங்கே ஒரு கிணற்றைக் கண்டுபிடித்து அதனிடம் உண்மை எதுவென்று கேட்டால், அந்தக் கிணறு பதிலை வெளிப்படுத்தும் என்று அறிவுறுத்தப்பட்டார்.
அந்த மனிதரும் கிணற்றைக் கண்டுபிடித்து அதனிடம் மிகவும் அடிப்படையான அந்தக் கேள்வியைக் கேட்டார்.
கிணற்றின் ஆழத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் கிராமத்தின் குறுக்குச் சாலைக்குச் சென்றால், அவர் தேடி அலைந்ததற்கு ஒரு விடை கிடைக்கும் என்று கூறியது.
முழு நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அந்த மனிதர் குறுக்குச் சாலையை நோக்கி விரைந்தார். ஆனால் அங்கே வெறும் மூன்று கடைகளை மட்டுமே கண்டார்.
ஒரு கடையில் உலோகத் துண்டுகளும், அடுத்த கடையில் மரத்துண்டுகளும், மூன்றாவது கடையில் மெல்லிய கம்பிகளும் விற்கப்பட்டன.
அங்கு காணப்பட்ட எந்த மனிதரும் உண்மையை வெளிப்படுத்துவதாக அவருக்குத் தோன்றவில்லை, ஏமாற்றம் அடைந்தார்.
அவர் அந்தக் கிணற்றுக்குத் திரும்பிச் சென்று அந்த குறுக்குச் சாலைக்கு அனுப்பப்பட்டதற்கான விளக்கத்தைக் கேட்டார்.
ஆனால், வரும் காலத்தில் புரிந்து கொள்வாய் என்ற பதிலே அவருக்கு கிடைத்தது.
அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரக்கக் கத்த ஆரம்பித்தார். அவரது உரத்தக் குரலே எதிரொலியாகக் கேட்டது.
அந்த நேரத்தில், அவர் முட்டாள் ஆக்கப்பட்டதாக நினைத்துக் கோபப்பட்டு, உண்மையைத் தேடி அலையும் தனது முயற்சியைத் தொடர்ந்தார்.
வருடங்கள் கடந்தன; அந்தக் கிணற்றில் நடந்த சம்பவங்கள் மெதுவாக அவர் நினைவிலிருந்து மறைய ஆரம்பித்தது. ஆனால் ஒரு நாள் நிலா வெளிச்சத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அற்புதமான சித்தார் இசை அவர் கவனத்தை ஈர்த்தது. அது மிகவும் அற்புதமாக, தேர்ச்சி பெற்ற ஒருவரால் உத்வேகத்துடன் வாசிக்கப்பட்டது.
உண்மையைத் தேடுபவர், இசை வரும் திசையை நோக்கி ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தார்.
அவர் சித்தார் கருவியின் சரங்களுக்கு மேல் நடனமாடும் விரல்களைப் பார்த்தார்.
அங்கீகாரம் கிடைத்தவனைப் போல் சந்தோசத்தில் உரக்கக் கத்தினார். அந்த மனிதர் எதற்கும் முக்கியத்துவம் இல்லாதது போல் இருந்தார். அந்த மூன்று கடைகளில் இருந்த மெல்லிய கம்பிகளாலும், உலோகத் துண்டுகளாலும், மரத்தாலும் செய்யப்பட்டது சித்தார் என்ற இசைக்கருவி என்று அவர் உணர்ந்தார்.
இறுதியாக அந்தக் கிணறு சொல்ல வந்த செய்தியைப் புரிந்து கொண்டார்.
ஏற்கனவே நமக்கு தேவையான அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் சரியாக சேர்த்து பொருத்துவதே நமது வேலையாகும்.
தனித்தனி துண்டுகளை மட்டும், நாம் உணரும் வரை அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் துண்டுகள் ஒன்றிணைந்து ஒரு தொகுப்புக்கு வந்தவுடன், ஒரு புதிய பொருள் வெளிப்படுகிறது. அதன் இயல்பை, துண்டுகளை மட்டும் கருத்தில் கொண்டு நாம் புரிந்து கொண்டிருக்க முடியாது.