இமாம் ஜிஜாலி என்ற இஸ்லாமிய ஞானி ஒருவர் இருந்தார்.
அவர் ஆன்மிக நூல்களை இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பது வழக்கம்.
ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார்.
அந்தக் கனவில் ஒரு தேவதை தோன்றி அவரிடம், "நீ ஏன் இரவில் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்து உன் சக்தியை வீணாக்குகிறாய்? இனிமேல் நீ அப்படிச் செய்யாதே. என்னுடன் வா. உனக்கு நான் எல்லா வகையான ஞானத்தையும் தருகிறேன். நீ உன் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக இனிமேல் கடினமாக உழைக்க வேண்டியதில்லை” என்று கூறியது.
அதற்கு ஜிஜாலி தேவதையிடம், நீங்கள் தரும் அப்படிப்பட்ட பரிசு எனக்கு வேண்டாம், ஏனென்றால் உழைக்காமல் கிடைக்கும் பரிசு எதையும் நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்” என்று கூறி மறுத்து விட்டார்.
ஆனால் அந்தத் தேவதையோ அவரிடம், “நீ என்னிடமிருந்து எதையாவது பரிசாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்" என்று கூறி வற்புறுத்தியது.
ஜிஜாலி எவ்வளவோ மறுத்துப் பார்த்தார். முடிவில் அவர் தேவதையின் கோரிக்கைக்கு இணங்க வேண்டியதாயிற்று.
அந்த நிலையில் அவர், "தேவதையே, உண்மையில் உங்கள் பரிசு எதுவும் எனக்கு வேண்டாம். ஆனால் நீங்கள் எதையாவது எனக்குக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று விரும்பினால், இதோ, இந்த விளக்கிற்குச் சிறிது எண்ணெய் இடுங்கள். அது நான் பெற்ற அறிவை யாருக்காவது வழங்குவதற்கு உதவியாக இருக்கும்” என்றார்.