கைலாயத்தில் சிவனது அணுக்கத் தொண்டராக இருந்தவர் சுந்தரர். சிவனால் மிகவும் நேசிக்கப்பட்டவர். அப்படி இருக்கையில் அவர் அங்கிருக்கும் இரு பெண்களின் மீது மையல் கொண்டதால் சிவலோகத்தை விட்டுப் பூலோகம் வர நேரிட்டது.
பூலோகத்தில் ஒரு செல்வந்தர் வீட்டில் சுந்தரராக வளர்ந்தார். ராஜபோகத்துடன் வளரும் அவருக்குத் திருமணம் நடந்தது. அந்த வேளையில் சிவனே அங்கு ஒரு சிவனடியாராகக் கையில் ஓர் ஓலையுடன் வந்தார்.
வந்தவர், “சுந்தரா, நீ என் அடிமை’’ என்றார். சுந்தரரை அடிமை என்றதும் அவர் ஆத்திரத்துடன், ”யார் இந்தப் பித்தன்?’’ என்று கேட்டார்.
முதியவரோ, “உன் பாட்டனார் எழுதித் தந்த ஓலை இது’’ என்று சொல்லித் தான் கொண்டு வந்த ஓலையைக் காட்டினார்.
அதில், ‘நானும் என் சந்ததியினரும் திருவெண்ணெய்நல்லூரிலுள்ள உனக்கு அடிமை’ என எழுதியிருந்தது.
ஓலை ஒன்றே சாட்சி என்பதால், “ஓலையைக் கொடுங்கள். நான் படிக்க வேண்டும்’’ என்றார் சுந்தரர்.
முதியவரோ, “நான் ஓலையைத் தர மாட்டேன்’’ என்று மறுத்தார்.
ஆவணமாகிய ஓலைச்சுவடிதான் ஒரே சாட்சி. அந்த ஆவணத்தை இவர் பிடித்திழுக்க, அவர் தர மறுக்க, சுந்தரருக்கும், முதியவர் ரூபத்தில் வந்த சிவனுக்கும் அங்கு ஒரு போட்டி நடக்கிறது.
சிவகாரியம் செய்வதற்காகவும், பக்தியைப் பரப்புவதற்காகவும் கைலாயத்திலிருந்து வந்த சுந்தரர் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். காரணம், தான் பெரும் செல்வந்தன், அழகன் என்பது போன்ற ஆணவம் அவரிடமிருந்தது.
சிவபெருமானிடமிருந்து சுந்தரர் ஆவணத்தைப் பறிக்கப் பார்க்கிறார். சிவனோ சுந்தரரிடம் இருந்த தேவையற்ற ஆணவத்தைப் பறிக்கப் பார்க்கிறார். ஆவணத்திற்கும் - ஆணவத்திற்கும் போட்டி!
முடிவில் சுந்தரர் ஓலைச்சுவடியை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டார்.
முதியவரோ, “இது மூல ஓலை அல்ல; படிஓலைதான்’’ என்று சொல்லவும் இருவரும் திருவெண்ணெய்நல்லூருக்குப் போய் வழக்காடுகிறார்கள்.
அங்கே கோவிலுள் இறைவன் சுந்தரருக்குத் தன்னைக் காட்டியருளினார்:
”முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோ முன்னர் நாம் தடுத்தாண்டோம்”
‘முற்பிறவியில் நீ எமக்குத் தொண்டன். நீ மங்கையர் மேல் விருப்பம் கொண்டதால் நம் ஆணைப்படி இப்பிறவியை அடைந்தாய். துன்பமான உலக வாழ்வு உன்னைத் தொடராதிருக்க உன்னைத் தொடர்ந்து வந்து நாமே தடுத்தாட்கொண்டோம். தெய்வகாரியம் உனக்காகக் காத்திருக்கும்போது தேக வாழ்வில் நீ ஈடுபட இருந்தாயே, சுந்தரா?’’ என்று பெருமான் உண்மையை உரைத்தார்.