ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த விவசாயி ஒருவர், அங்கிருந்த வட்டிக் கடைக்காரரிடம் கடன்பட்டிருந்தார்.
விவசாயிக்கு ஒரு மகள் இருந்தாள்.
வட்டிக்கடைக்காரர் விவசாயியிடம், ‘‘உன் கடனை உடனே கொடு. இல்லையென்றால் உன் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வை. நீ கடனைத் திருப்பித் தரவே வேண்டாம்’’ என்றார்.
அப்பாவும் மகளும் அதிர்ச்சியுற்றனர்.
நல்லவர்போல் நடித்த வட்டிக்கடைக்காரர் மேலும் கூறினார்:
‘‘சரி, இன்னொரு யோசனை சொல்கிறேன். ஒரு கறுப்புக் கூழாங்கல்லையும், வெள்ளைக் கூழாங்கல்லையும் நான் ஒரு துணிப் பைக்குள் போடுகிறேன். உன் பெண் பையிலிருந்து கறுப்புக் கல்லை எடுத்தால் என்னை மணந்து கொள்ள வேண்டும். வெள்ளைக் கல்லை எடுத்துவிட்டால், திருமணமும் வேண்டாம். கடனும் ரத்து செய்யப்படும். ஆனால் எந்தக் கல்லையும் எடுக்க மறுத்தால், நீங்கள் சிறைக்குச் செல்லத்தான் நேரிடும்’’
வட்டிக்காரரின் மிரட்டலில் விவசாயி பணிந்தார்.
கிராம மக்கள் சுற்றிலும் நிற்க, வட்டிக் கடைக்காரர் நிலத்திலிருந்து இரண்டு கறுப்புக் கற்களை எடுத்துப் பைக்குள் போடுவதை அப்பெண் பார்த்துவிட்டாள். அங்கு கீழே பல நிறங்கள் கொண்ட வேறு சில கற்களும் இறைந்து கிடந்தன.
அப்பெண்ணின் நிலைமையில் இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
வட்டிக்கடைக்காரர் இரண்டு கறுப்புக் கற்களைப் பைக்குள் போட்டதைக் கிராமத்தாரிடம் கூறியிருக்கலாம்.
அல்லது,
கல்லை எடுக்க மறுத்திருக்கலாம்.
அல்லது
பையிலிருந்து ஒரு கறுப்புக் கல்லை எடுத்துத் தன்னையே தியாகம் செய்து தந்தையைக் கடனிலிருந்தும், சிறையிலிருந்தும் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் அந்தப் பெண் அப்படிச் செய்தாளா? இல்லை, பையிலிருந்து ஒரு கல்லை வெளியில் எடுத்துத் தன் கைக்குள் மூடி வைத்துக் கொண்டாள்.
பிறகு தற்செயலாக அந்தக் கல் கை நழுவிக் கீழே விழுந்ததைப் போல, மற்ற கற்களுடன் போட்டு, ‘‘ஐயோ, எடுத்த கல் கீழே விழுந்துவிட்டதே, இப்போது என்ன செய்வது...?’’ என்று கூவினாள்.
பிறகு அவளே,‘‘சரி, கீழே விழுந்தது போகட்டும். பையில் உள்ள கல்லின் நிறத்தைப் பார்த்தால், நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்துவிடும், நான் அதை எடுக்கட்டுமா?’’ என்று மக்களிடம் கேட்டாள்.
பையிலுள்ள கல் கறுப்பு என்றால், அவள் எடுத்த கல் வெள்ளைதான் இருந்திருக்க வேண்டும் என்று கிராம மக்கள் தீர்ப்பு வழங்கினர்.
உடனே அவள் பையிலிருந்த கறுப்புக் கல்லை எடுத்தாள். வட்டிக்கடைக்காரர் வாடிப் போனார்.