பொன்மாலைப் பொழுது. ஸ்ரீராமர், சீதா தேவியுடன் அந்தப் பூந்தோட்டத்தில் குளிர் காற்றினையும், மரம் கொடிகளிலுள்ள பூக்களின் நறுமணத்தையும் அனுபவித்தபடி மகிழ்ச்சியாக இருந்தார்.
அனுமன் இருவரையும் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருக்கிறார்.
தாம் உட்கார்ந்திருந்த மரம், கொடி நிழலில் மகிழ்ந்திருந்த ஸ்ரீராமர், ‘‘அனுமனே! இந்தத் தோட்டம் எத்துணை சிறப்பாக உள்ளது பார்! அழகிய கிளைகள், புத்தம் புதிய தளிர்கள் நிறைந்தும், நறுமணம் வீசும் அழகிய மலர்களும் கொண்டுள்ள மரத்தின் மீது இந்த அழகிய கொடி தன்னுடைய மலர்களையும், கனிகளையும் படர்த்திக் கொண்டுள்ளதே!
‘‘இந்தக் காட்டிலுள்ள செடி, கொடிகளில் இதுவல்லவா அழகாக உள்ளது! இதனால் அல்லவா இந்த வனம் மேலும் அழகு பெறுகிறது! எத்தனை லாகவமாக எழிலூட்டும் இக்கொடி தன்னைப் படரவிட்டுச் சோபிக்கிறது!’’ என்று பாராட்டி வியந்து பேசினார்.
அருகிலிருந்த பிராட்டியாருக்கு ஸ்ரீராமர் கொடியைப் புகழ்ந்து கூறியது ஒப்பவில்லை.
உடனே அவர் அனுமனிடம், ‘‘குழந்தாய்! மரம் இல்லாமல் மெல்லிய கொடி எப்படிப் படர முடியும்? இம்மரத்தின் மீதும், கிளைகள் மீதும்தானே இக்கொடி தன் மலர்களையும் கனிகளையும் படரவிட்டு மனதை மயக்குகிறது!
‘‘மரம் தானே கொடிக்கு எழிலூட்ட முடியும். மரம் இல்லாமல் கொடியால் என்ன செய்ய இயலும்? நீயே கூறு மகனே! மரத்தினால் அல்லவா இச்சோலையும் இங்கு படர்ந்த கொடியும் பெருமை பெறுகின்றன!!’’ என்றார்.
உடனே ராமர், ‘‘அனுமனே! கொடியாலன்றோ மரம் அழகு பெறுகிறது? வெறுமனே நிற்கும் மரத்தால் ஆவது என்ன?’’ என்றார்.
குறிப்பறிந்து சொல்லும் சொல்லின் செல்வனான அனுமன் சிறிது யோசித்தார்.
பகவானைச் சார்ந்திருப்பதா, பிராட்டியாரைச் சார்ந்திருப்பதா? வேலைக்காரன் எஜமானனையும், குழந்தை தாயையும் சார்ந்திருப்பது போல, அம்மை-அப்பன் இருவரிடமுமே பக்தன் பக்தி பூண்டுவிட்டால் வேறென்ன வேண்டும்!
இவர்கள் இருவரும் மரமும் கொடியும்போல் பிணைந்திருப்பதாலன்றோ உலகமே இயங்குகின்றது.
சீதா-ராமர் இருவரின் கூற்றையும், உட்பொருளையும் உணர்ந்தவராக, இருவரையும் நோக்கித் தொழுத கைகளுடன் அனுமன், ‘‘அண்ணலே! அம்மையே! எனக்கோ மரம், கொடி ஆக இந்த இரண்டின் நிழலில் இருப்பதே மிகச் சுகமாக உள்ளது’’ என்றார்