ஒரு ஊரில் ஒரு நாய் இருந்தது.
அது யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் ஓடிச் சென்று அவர்களைக் கடித்து வைத்துவிடும்.
இதனால் அந்த நாயை வளர்த்தவர் பலரிடமும் திட்டு வாங்க வேண்டியிருந்தது.
நாயைக் கொல்லவோ அல்லது அவரிடமிருந்து பிரிக்கவோ அவருக்கு மனமில்லை.
என்ன செய்யலாம் என சிந்த்தித்தார்.
அவர் அந்த நாயின் கழுத்தில் ஒரு மணியை வாங்கிக் கட்டி விட்டார்.
அந்த மணியிலிருந்து சப்தம் கேட்டதும் கடிநாய் தான் வருகிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நாயிடமிருந்து பலரும் தப்பித்துக் கொண்டனர்.
ஆனால், அந்த நாய்க்கு அந்த மணி கட்டியிருப்பது பெருமையாக இருந்தது.
ஊரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தனது கழுத்தை ஆட்டியபடி மணியை அடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த கிழட்டு வேட்டை நாய் அதனிடம், “இந்த மணியை உனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனக் கருதுகிறாய். உண்மையில் இது உனக்கு வழங்கப்பட்ட இழிவின் அடையாளம். நீ ஒரு கடிநாய் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காகக் கட்டுப்பட்டுள்ளது” என்றது.
கிழட்டு நாய் நமக்கு அளிக்கப்பட்ட சிறப்பை பொறாமையால் குறை கூறுகிறது என்று எண்ணியபடி தன் கழுத்தை ஆட்டியபடி வீட்டிற்குத் திரும்பிச் சென்றது.
எப்படியோ? நாய்க்கு கழுத்தில் கட்டப்பட்ட மணியால், ஊரிலிருப்பவர்கள் பலரும் மணி சத்தத்தைக் கேட்டதும் முன்னெச்சரிக்கையாக ஒதுங்கிக் கொண்டார்கள். அந்த நாயும் அடுத்து யாரையும் கடிக்கவில்லை.