கோவிந்தன் மகாகருமி. ஆனால் லாபம் வருமென்று தெரிந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்வான்.
ஒரு நாள் அந்தக் கோவிலுக்கு ஒரு சாது வந்திருந்தார். எப்போதும் கடவுளை வணங்கியறியாத கோவிந்தன், சாதுவைக் காணக் கோவிலுக்குக் கிளம்பினான்.
வியப்படைந்த மனைவி, இது விஷயமாகக் கணவனை விசாரித்தாள்.
‘‘அடிப்பைத்தியமே! அந்த சாதுவிடம் நிறைய சித்திகள் இருக்கிறதாம். அவர் சொன்னபடி செய்தால் நாம் கேட்ட வரங்களைத் தருவாராம். எவ்வளவு செலவானாலும் சரி, நாம் அந்த சாதுவை மகிழ்வித்து வரங்களை அள்ளிக்கொண்டு வர வேண்டும்’’ என்றான் கோவிந்தன்.
கோவிலில் சாது தர்மத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கோவிந்தன் முன் வரிசையில் அமர்ந்து சிரத்தையுடன் கேட்டான். சாது பிரசங்கத்தை முடித்தவுடன், அவர் காலில் விழுந்தான்.
அவர், அவனிடம், ‘‘உன்னைப் போன்ற செல்வந்தர்கள் மூலம்தான் ஊருக்கு நல்லது நடக்க வேண்டும்’’ என்றார்.
கோவிந்தன் புளகாங்கிதமடைந்தான். ‘‘ஆணையிடுங்கள், சுவாமி! நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்’’ என்றான்.
‘‘நல்லது அப்பா! இவ்வூர் மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் கிணறு வெட்டி, குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கு’’ என்றார்.
கோவிந்தன் சரி என்றான். குழந்தைகள் படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் மற்றும் தங்குமிடம் கட்ட வேண்டும் என்றார் சாது.
சாது கூறிய செயல்களையெல்லாம் சில மாதங்களிலேயே கோவிந்தன் பூர்த்தி செய்தான். சாது ஊரை விட்டுக் கிளம்பப் போகிறார் என்றறிந்த அவன் அவரது பாதங்களில் விழுந்து, ‘‘எனக்கு இரண்டு வரங்கள் கொடுங்கள் சுவாமி’’ என வேண்டினான்.
‘‘உனக்கு ஒரு மந்திரம் கூறுகிறேன். அதை மூன்றுமுறை மனதிற்குள் உச்சரித்து, உனக்கு வேண்டியதை நினைத்துக்கொள். உடனே நிறைவேறும்’’ என்று கூறி சாது கோவிந்தனின் காதில் மந்திரத்தைக் கூறிவிட்டுக் கிளம்பினார்.
கோவிந்தன் மிக்க ஆர்வத்துடன் சாது உபதேசித்த மந்திரத்தை மனதிற்குள் ஜபித்து, ‘‘என் வீடு முழுவதும் தங்கமாகிவிட வேண்டும்’’ என்று எண்ணினான்.
உடனே, கோவிந்தனின் வீடு, வாசல், கதவு, ஜன்னல் எல்லாம் தங்கமாகிவிட்டன. திடீரென்று அவனது வீடு முழுவதும் தங்கமாக மின்னுவதைப் பார்த்து, மக்கள் அனைவரும் ஓடோடி வந்து, வீட்டிற்குள் நுழையத் தொடங்கினர். சிலர் தொட்டுப் பார்த்து,‘அடடே! தங்கம்’ என்று ஆச்சரியப்பட்டுப் போய் அங்கங்கே கீறியெடுக்க ஆரம்பித்தனர்.
உடனே கோவிந்தனின் மனைவி, ‘‘ஜனங்கள் கிடைத்த தங்கத்தை எல்லாம் எடுத்துப் போய்விடுவார்கள். நாம் இருக்க வீடுகூட இல்லாமல் போய்விடும்’’ என்று கத்தினாள்.
கோவிந்தனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே ‘என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் இந்தத் தங்கம் கண்ணில் படக் கூடாது’ என்று மனதில் நினைத்து இரண்டாம் முறை மந்திரத்தை ஜபித்தான்.
அவ்வளவுதான். ஊர் மக்களெல்லாம் ஏமாற்றத்துடன் அவரவர் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். கோவிந்தனுக்கும், அவன் மனைவிக்கும் மட்டும் வீட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தங்கமாகவே தெரிந்தது.
அன்று அவர்கள் ஆனந்தமாக தங்க நாற்காலியில் அமர்ந்தனர்; தங்கத் தட்டில் உண்டனர்; தங்க டம்ளரில் நீர் பருகினர்.
மறுநாள் கோவிந்தன், வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து ஒரு செங்கல்லை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டுபோய் தங்கக் கடையில் விற்க முயன்றான்.
கடைக்காரர் சிரித்தபடி அவனிடம், ‘‘கோவிந்தா! உனக்குப் பைத்தியமா? வெறும் செங்கல்லைக் காட்டி, தங்கக்கல் என்கிறாயே!’’ என்று கூறினார்.
அனைவரும் கோவிந்தனைப் பார்த்து எள்ளி நகையாடினர். பின்னர்தான் கோவிந்தனுக்குத் தன் பிழை புரிந்தது.
அதிர்ஷ்டம் வந்தாலும், பேராசைப்பட்டால் மீதியிருப்பது அமைதியின்மைதான் என்று புரிந்து கொண்டான்.