ஒரு மிடுக்கான மனிதருடன் வந்த நர்ஸ் அந்த வயதான நோயாளியிடம் சென்று, ‘‘சார், உங்கள் மகன் வந்திருக்கிறார். கண்திறந்து பாருங்கள்’’ என்றார்.
அதே வார்த்தைகளை நர்ஸ் பலமுறை சொன்ன பிறகே நோயாளியின் கண்கள் லேசாகத் திறந்தன. மங்கலாகத் தெரிந்த அந்த மனிதரின் பக்கம் நோயாளியின் கை மெதுவாக அசைந்தது.
பெரியவரின் துவண்ட கரத்தை அன்புடன் பற்றி ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று கையை மெல்ல அழுத்தினார் அவர். இரவு முழுவதும் அவர் கண்விழித்து, நோயாளியின் கையைப் பிடித்தபடியே அவருக்குத் தைரியமூட்டிக் கொண்டிருந்தார்.
நர்ஸும் பலமுறை அந்த மகனை ஓய்வெடுக்கும்படிக் கூறினார். அவர் நகரவில்லை.
அவர் நோயாளியிடம் அன்பாகப் பேசுவது மட்டும் நர்ஸின் செவிகளில் அவ்வப்போது கேட்டது. பெரியவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. தன் மகனின் கைகளைப் பற்றியிருக்கும் சுகத்திலேயே ஆழ்ந்திருந்தார்.
பொழுது விடிந்தது. பெரியவரின் வாழ்வும் முடிந்தது. தன்னைப் பிடித்திருந்த கரங்களை விலக்கிய பின் அந்த மனிதர் நர்ஸுக்குத் தகவல் தந்தார். நர்ஸ் செய்ய வேண்டிய கடமைகள் முடியும்வரை காத்திருந்தார்.
பின் அவர் நர்ஸிடம், ‘‘சிஸ்டர், இவர் யார்?’’என்று கேட்டார்.
நர்ஸ் திடுக்கிட்டு, ‘‘அப்படியென்றால் அவர் உங்கள் அப்பா இல்லையா?’’ என்று கேட்டார்.
‘‘இல்லை. அவரை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. நான் வேறு ஒருவரைப் பார்க்க இங்கு வந்தேன்.’’
‘‘நான் உங்களை அவரிடம் அழைத்துச் சென்றபோது நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?’’
‘‘சிஸ்டர், நான் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனைக் காண மிகவும் விரும்புகிறார், ஆனால் மகன் அங்கில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அவரது ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில், நான் அவரது மகனாக சிறிது நேரம் இருந்தாலென்ன என்று தோன்றியது’’ என்று கூறிவிட்டு அமைதியாகப் புறப்பட்டார்.