கோசல நாட்டின் மன்னர் பிரசேனஜித்திடம் பவயேக்கா என்ற யானை இருந்தது. அறிவும், வீரமம் மிக்க அந்த யானை எல்லாப் போர்களிலும் வெற்றி பெற்று வந்தது. மன்னர் அந்த யானையின் மீது அமர்ந்திருக்கும்போது அவரை எவராலும் வெல்ல முடியாது என்ற செய்தி பரவியிருந்தது.
காலம் சென்றது. அந்த யானை முதுமை அடைந்தது. ஒரு நாள் வழக்கம்போல் குளத்திற்கு நீராடச் சென்றது. திடீரென்று குளத்தில் இருந்த சேற்றுச் சூழலில் அகப்பட்டுக் கொண்டு தடுமாறியது.
வெளியேறத் துடித்த யானை ஆழமாய்ச் சேற்றுக்குள் சிக்கி அகப்பட்டுக் கொண்டது.
அரண்மனையிலிருந்து யானைப் பயிற்சியாளர்கள் சென்று யானையை வெளியே இழுக்கப் பலவாறு முயன்றார்கள்.
கரும்பும் பழங்களும் கொடுத்து அதன் ஆசையைத் தூண்டி இழுக்கப் பார்த்தார்கள். யானையோ பயத்தில் இன்னும் ஆழமான சேற்றுச் சூழலுக்குள் மாட்டிக்கொண்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறினார்கள்.
அப்போது புத்தபிரான் ஜேதவனத்தில் தங்கியிருந்தார். அவருக்கு இந்தச் செய்தி தெரிந்தது.
அந்த யானையின் பயிற்சியாளர் முதுமை காரணமாகப் பணியிலிருந்து விலகி புத்தரின் சீடராகச் சேர்ந்திருந்தார். ‘‘யானையைப் பார்த்து வாருங்கள்’’ என்று அவரை அனுப்பி வைத்தார் புத்தர்.
அந்த முதிய பயிற்சியாளர் குளத்தருகே வந்தார். யானை சேற்றுக்குள் அகப்பட்டுக்கொண்டு தவிப்பதைப் பார்த்ததும் சிரித்தார்!
சுற்றி இருந்தவர்கள் என்ன இப்படிச் சிரிக்கிறாரே என்று வியப்போடு பார்த்தார்கள்.
அந்த முதியவர், அங்கே நின்றிருந்த பாகன்களை அழைத்து, ‘‘போரில் முழக்கப்படும் எக்காளத்தை யானையின் முன் முழக்குங்கள்’’ என்றார்.
உடனே எக்காளங்கள் முழங்கின. அவ்வளவுதான்... அந்த ஒலியைக் கேட்டதும், அப்பகுதியே நடுங்கும்படி யானை பிளிறியது. சட்டென்று சேற்றிலிலிருந்து வெளியே வந்துவிட்டது.
இந்தச் செய்தியைச் சீடர்கள் புத்தரிடம் கூறிப் பாகனின் செயலுக்கு விளக்கம் கேட்டனர்.
புத்தபிரான் கூறினார்: ‘‘ ‘எப்படி இந்த யானை தன் நிலை மறந்து இப்படிச் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது?’ என்பதை நினைத்துத்தான் அந்தப் பாகன் சிரித்தார். போரின்போது ஒலிக்கும் எக்காளத்தை எழுப்பியது, அந்த யானையின் உண்மை நிலையையும் ஆற்றலையும் உணர்த்தத்தான்’’
இதைக் கூறிவிட்டு புத்தர், ‘‘நாம் இளவயதில் வாழ்வின் துவக்கத்தில் வளர்த்திருக்கும் பழக்கங்கள் முதுமையிலும் நம்மைத் தொடரும்’’ என்றார்.