மாலிங்கபுத்தா என்ற ஒரு துறவி கல்வி கேள்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியவர். ஆனாலும் அவர் தம் அறிவின் மூலம் பலரை வெற்றி கொண்டு அடிமைப்படுத்தித் தமது சீடர்களாக்கிக் கொண்டவர்.
மாலிங்கபுத்தா புத்தரது பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரிடம் விவாதம் செய்ய வேண்டும் என்று தமது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் அவரைத் தேடி வந்தார்.
புத்தர் அவரைப் பார்த்ததும் அவர் இன்னும் முழுமையான விழிப்புணர்வை எட்டவில்லை என்பதைக் கண்டு கொண்டார்.
‘‘நான் நாளை காலை எனது சீடர்களுடன் சங்கத்தில் இருக்கும்போது என்னை வந்து நீங்கள் பாருங்கள்’’ என்றார் புத்தர்.
மறுநாள் மாலிங்கபுத்தா தமது சீடர்களுடன் புத்தரின் சங்கத்திற்குச் சென்றார். அங்கே சீடர்கள் மத்தியில் புத்தர் கையில் ஒரு தாமரையுடன் அமர்ந்திருந்தார். அருகே மகாகாஷ்யபன், சாரிபுத்தா, மஞ்சுஸ்ரீ போன்ற சீடர்கள் இருந்தனர்.
மாலிங்கபுத்தா புத்தரிடம், ‘‘நேற்று நான் கூறியபடியே உங்களுடன் விவாதம் செய்ய வந்திருக்கிறேன். கேள்விக் கணைகளை நான் தொடுக்கலாமா?’’ என்று வினவினார்.
புத்தர், ‘‘உங்களது எந்தக் கேள்விக்கும் பதில் தருகிறேன். ஆனால் நீங்களும் உங்களது சீடர்களும் என்னுடன் இரண்டு வருட காலம் தங்கியிருந்து இங்கு நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து வர வேண்டும். இந்த இரண்டு வருடத்தில் எந்தக் கேள்வியும் நீங்கள் கேட்கக் கூடாது. சம்மதமா?’’ என்று கேட்டார்.
இதை எதிர்பாராத மாலிங்கபுத்தா குழப்பத்தில் ஆழ்ந்தார். அங்கு ஒரு நீண்ட மௌனம் நிலவியது. அந்தச் சமயத்தில்தான் புத்தரின் சீடன் மகாகாஷ்யபன் குபீரென்று சிரித்தான். அனைவருக்கும் அந்தச் சிரிப்பு அதிர்ச்சியைத் தந்தது. மாலிங்கபுத்தா மகாகாஷ்யபனின் சிரிப்பிற்கு என்ன விளக்கம் என மௌனமாக வினவ மகாகாஷ்யபன் பேச ஆரம்பித்தான்:
‘‘மாலிங்கபுத்தரே, உங்களுக்கு புத்தரிடம் கேட்க வேண்டிய கேள்வி எதுவுமிருந்தால் அதை இப்போதே கேட்டுப் பதிலைப் பெறுங்கள். அப்படிச் செய்யாமல் புத்தர் கூறியபடி இரண்டு வருடம் காத்திருந்தால், கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு எழாது. ஏனெனில் இரண்டு வருட அமைதியில் உங்களது கேள்விகள் அனைத்திற்கும் சங்கத்தின் செயல்கள் மூலமாகவே விடைகள் தெரிந்துவிடும்.
‘‘ஆதலால் புத்தரிடம் நீங்கள் ஏமாற வேண்டாம். ஏனென்றால் நானும் மற்றும் பலரும் இந்த ஏற்பாட்டின்படி முன்னதாகவே சிக்கிக் கொண்டவர்கள்தான். அதை எண்ணித்தான் நான் சிரித்தேன். ஆகவே கேள்விகளை இப்போதே நீங்கள் கேட்டுவிடுங்கள்’’ என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்.
இவ்வாறு மகாகாஷ்யபன் பேசி முடித்தவுடன் புத்தர் தன்னிடம் இருந்த ஒரு தாமரை மலரை மகாகாஷ்யபனுக்கு அளித்தார்.