ஓர் அப்பாவும் அம்மாவும் தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். முடிவில் பொருத்தமான ஓர் இளைஞனை முடிவு செய்கிறார்கள். ஆனால் அவளோ அதற்குச் சம்மதிக்கவில்லை.
‘‘உலகிலேயே மிகச் சிறந்த ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்!’’ என்றாள்.
‘‘சரி. உன் விருப்பப்படியே ஒருத்தரைத் தேர்ந்தெடுத்துக்கொள்!’’ என்று சொல்லிவிடுகிறார்கள். மகள் தேட ஆரம்பிக்கிறாள்.
‘‘உலகிலேயே உயர்ந்தவர் யார்?’’ யோசித்தாள்.
அந்தச் சமயம் அந்த நாட்டு இளவரசர் பட்டத்து யானையின் மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார்.
‘‘ஆகா. இவர்தான் உயர்ந்தவர். இவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!’’ என அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே எதிரே தெருவில் ஒரு சந்நியாசி நடந்து வருகிறார்.
யானை மீதிருந்த இளவரசன் கீழே குதித்து வந்து சந்நியாசியின் காலடியில் விழுந்து வணங்குகிறான். அப்படியென்றால் இளவரசனைவிட சந்நியாசியே உயர்ந்தவர், இவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்து சந்நியாசியைப் பின் தொடர்கிறாள்.
அவர் நேரே ஆற்றங்கரைக்குப் போகிறார். அங்கே இருந்த அரச மரத்தின் அடியில் ஒரு கடவுள் சிலை. அதை வணங்குகிறார்.
அப்படியென்றால், சந்நியாசியைவிட இந்தச் சிலை உயர்வானது. இதைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்தாள்.
அந்தச் சிலையின் மீது நாய் ஒன்று சிறுநீர் அபிஷேகம் செய்துவிட்டுப் போகிறது.
இவள், இந்த நாயே உயர்வானது! என நினைக்கும் நேரத்தில் அங்கே வந்த ஒரு சிறுவன் ஒரு கல்லை எடுத்து நாய் மீது வீசி விரட்டுகிறான்.
அட, இந்தச் சிறுவனே உயர்ந்தவன்!
அப்போது ஓர் இளைஞன் அந்தப் பக்கம் வருகிறான். ‘ஏன் அந்த நாயைக் கல்லால் அடிக்கிறே?’ என்று கண்டிக்கிறான். சிறுவன் ஓடிவிட்டான்.
‘அப்படியென்றால், இந்த இளைஞன்தான் மேலானவன்’ என நினைத்துப் பெற்றோரிடம் போய் தன் முடிவைச் சொல்கிறாள்.
‘‘சரி. உன் விருப்பப்படியே நடக்கட்டும்!’’ என்று சொல்லி அவள் குறிப்பிட்ட அந்த இளைஞனைச் சந்திக்கிறார்கள்.
ஆச்சரியம், அந்த இளைஞன் வேறு யாருமல்ல. ஏற்கனவே அவர்கள் பார்த்து முடிவு செய்திருந்த பையன்தான் அவன்!