அயோத தௌம்யர் என்ற குருநாதர் கங்கைக் கரையிலே குருகுலம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். அயம் என்றால் இரும்பு. இரும்பு போன்ற உறுதியான தசையை உடையவர் என்று பொருள். இவரின் முதல் சீடனின் பெயர் ஆருணி. அவன் பாஞ்சால நாட்டு ராஜகுமாரன். அவனுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு.
அயோத தௌம்யர், காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த ராஜகுமாரனை அழைத்து, ‘‘ஆருணி, நம் வயலில் மடை உடைபட்டு வெள்ளமாக நீர் ஓடுகிறது. நீ போய் மடையை அடைத்துவிட்டு வா’’ என்றார்.
அவன் குருவின் கட்டளையின்படி மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான். மண்ணை வெட்டி வெட்டி மடையில் போட்டுக்கொண்டே இருந்தான். காலை முதல் மாலை வரை இவ்வாறு செய்தான். ஆனால் மடை அடைபடவில்லை. உடைந்து கொண்டே இருந்தது.
‘குருநாதரின் கட்டளையை நிறைவேற்றாமல் திரும்பச் செல்லக் கூடாது’ என்று மண்வெட்டியை மடையிலே போட்டுவிட்டு ‘குருநாதா’ என்று கூறிவிட்டு குறுக்கே படுத்துவிட்டான்.
அங்கு வரும் நீர் அப்படியே தேங்கி நின்றது!
இரவில் குரு, பாடம் கற்றுத் தரும்போது முதலாவதாக அமரும் ஆருணி அங்கு இல்லாததைக் கண்டு, தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்று ‘ஆருணி’ என்றழைத்தார்.
‘‘சுவாமி, அடியேன் நீருக்குள் இருக்கின்றேன்’’ என்றான் மாணவன். ஏன்? என குரு வினவ, ‘மடை அடைபடவில்லை. ஆதலால் மடையில் படுத்துவிட்டேன்’ என்றான் ஆருணி.
அதற்கு குரு, ‘‘மகனே, நீ உன்னையே தியாகம் செய்துவிட்டாய், எழுந்து வா’’ என்றார்.
குரு அவ்வாறு கூறியதும் ஆருணி மடையிலிருந்து எழுந்து நீரைப் பிளந்துகொண்டு வந்தான். அதனால் உத்தாலகன் என்ற பெயர் பெற்றான்.
அவன் சிரசில் குரு கை வைத்து, ‘‘உனக்கு எல்லா ஞானமும் உதிக்கும்’’ என்று ஆசீர்வதித்தார்.