இராவணன், நவக்கிரகங்களைப் பிடித்துக் கொண்டு வந்து தன்னுடைய சிம்மாசனத்தில் படிகளாகப் போட்டு வைத்தான்.
அனைவரையும் ஆட்டிப் படைக்கும் நவக்கிரகங்கள், வேறு வழி இல்லாமல் குப்புற விழுந்து கிடந்தார்கள்.
இராவணன் ஒவ்வொரு முறையும் அவர்கள் முதுகில் காலடி வைத்து ஏறித்தான் அந்த சிம்மாசனத்திற்குப் போவான்.
இவ்விதம் நடந்து கொண்டிருப்பது ஒரு சமயம் நாரதர் கண்ணில் பட்டது.
அவர், 'என்ன செய்யலாம்?' என்று யோசித்து ஒரு முடிவோடு நேராக இராவணனிடம் சென்றார்.
"இராவணா? நீ நவக்கிரகங்களைப் பிடித்துக் கொண்டு வந்து உன் சிம்மாசனத்திற்குப் படிகளாகப் போட்டு வைத்திருக்கிறாய்.... அது உன்னுடைய வீரத்தைக் காட்டுகிறது. இருந்தாலும் ஒரு விஷயத்தை நீ யோசித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நீ சிம்மாசனத்திற்குப் போகும் போது, நவக்கிரகங்களின் முதுகில் நீ கால் வைத்து ஏறிப் போகிறாய்! அது உனக்குப் பெருமை இல்லை, அவர்களின் மார்பில் கால் வைத்து நீ ஏறிப் போக வேண்டும். அதுதான் உனக்குப் பெருமை!” என்றார்.
'நாரதர் சொல்வதும் சரிதானே' என்று யோசித்தான் இராவணன்.
உடனே அவன் குப்புறக் கிடந்த நவக்கிரகங்களைத் திருப்பி நேராகப் போட்டான். அவர்கள் மார்பில் அடி வைத்து மேலே ஏறிச் சிம்மாசனத்தில் சென்று அமர்ந்தான்.
அவ்விதம் அவன் சென்று கொண்டிருந்த போது, சனி பகவானின் பார்வை அவன் மேல் பட்டது.
அவ்வளவுதான்! சூர்ப்பணகை இராவணனைத் தேடி வந்தாள். சீதையின் அழகைப் பற்றி அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள். அதன் பிறகு நடந்துதான் நமக்குத் தெரியுமே...!