ஒரு மாளிகையின் தாழ்வாரத்தில் மன்னன் ஒருவன் நடந்து கொண்டிருந்தான்.
அப்போது எங்கிருந்தோ ஒரு காசைத் திருடிக் கொண்டு ஒரு சின்னஞ்சிறு குருவி அந்தத் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தது.
அந்தக் காசைத் தன்னுடைய காலிலே வைத்துக் கொண்டு அந்த மன்னனைப் பார்த்துக் கேலியாக, “என் கிட்ட ஒரு காசு இருக்கு. யாருக்கு வேணும்?" என்று மூன்று முறை கேட்டது.
மன்னன் குருவி சொன்னதைப் பெரிதுபடுத்தி அந்தக் குருவியைப் பார்த்து, “சும்மா இல்லாமல் என்ன அடிக்கடி சொல்கிறாய்? அந்தக் காசை எனக்குத்தான் கொடேன்!' என்றான்.
குருவி உடனே அந்தக் காசை மன்னனிடம் கொடுத்து விட்டு, “என்கிட்ட பிச்சை வாங்கினான் ராஜா” என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
உடனே மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது: “சே! உன்னிடமா நான் பிச்சை வாங்கினேன்! இந்தா உன் காசு!” என்று சொல்லி காசை எறிந்தான்.
அப்பொழுதும் குருவி, சும்மா இல்லை. “எனக்குப் பயந்து ராஜா காசைத் திருப்பிக் கொடுத்து விட்டான்” என்று சொன்னது.
சிறிய அறிவுடையவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்: அவற்றைப் பெரியோர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதுதான் இந்தக் கதை தரும் படிப்பினை.