உடலில் ஜீவன் மிகவும் கலக்கமடைந்தது. காரணம், ஐம்புலன்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
'யார் சிறந்தவன்?' என்ற பிரச்னை.
தங்களுக்கிடையில் போட்டி| "நான் தான் சிறந்தவன்” என்று புலன்கள் ஒவ்வொன்றும் கூச்சலிட ஆரம்பித்தன.
"நானே சிறந்தவன். நான் இல்லாவிட்டால் எதையுமே பார்க்க முடியாது" என்று கண் ஆணவத்துடன் கூறியது.
"செவிப்புலன் இல்லாவிட்டால் உலகில் எதைக் கேட்பாய்? எதை ரசிப்பாய்? நானே சிறந்தவன்" இப்படி செவி சீற்றமுடன் பேசியது.
"மலர் வாசனை, உணவின் வாசனை, நாற்றம் ஆகியவற்றை இனம் காண்பது யார்? நான்தானே... நானே சிறந்தவன்" என்று கூறி மூக்கு முழங்கியது.
"சுவையை அறிவது நாக்கே... வாய்தானே உணவை மென்று சுவைத்து உண்ண உதவுகிறது? வாயே புலன்களில் சிறந்தவன்” இப்படி வாதிட்டது வாய்.
“பேசுவது நானேயன்றோ ..." என்பது வாயின் வீராப்பாகவும் இருந்தது.
“உஷ்ணம், குளிர், வலி, உணர்வு, இன்பம், துன்பம் இவற்றை இனம் கண்டு உணர்த்துவது... தொடுபுலன்... நானே அல்லவா? என்னைவிடச் சிறந்த புலன் எதுவும் இல்லை..." என்று கூச்சலிட்டது தோல்.
இப்படியாக புலன்களிடையில் போட்டிக் கூச்சல்.
ஜீவனால் இந்தப் புலன்களின் தன்முனைப்புக் குரலைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
புலன்களின் போட்டி, தர்க்கம்... ஆர்ப்பாட்டம்... உச்சக்கட்டத்தை எட்டியது.
இதற்குத் தீர்வுதான் என்ன?
யார் சிறந்தவன் என்ற கூற வல்லவர் யார்?
பிரம்மதேவரிடம் சென்று தங்கள் விவாதத்தைக் கூறின.
“எங்களில் யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்" என்று கேட்டன.
"உங்களில் யார் உடலை விட்டு நீங்குவதால் அதிகமாகத் துன்பம் ஏற்படுகிறதோ அவனே சிறந்தவன்" என்றார் அவர்.
அவர் சொன்னதைச் சோதித்துப் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் ஐம்புலன்கள் திரும்பின.
முதலில் வாக்கு, உடலை விட்டுப் பிரிந்து கொஞ்ச காலம் சென்றது. மீண்டும் திரும்பி வந்தது.
"உடலே..... உடலே..... நான் இல்லாமல் நீ எப்படி வாழ்ந்தாய்? வாக்கு இல்லாமல் உன்னால் வாழ முடிந்ததா?"
"ஊமையாகப் பிறந்தவர்களைப் போல கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, மூக்கால் சுவாசித்து, சிந்தித்து வாழ்ந்தேன். வாக்கு இல்லாவிட்டால் என்ன?" என்று உடல் கூறிய பதிலைக் கேட்டு வாய் மௌனம் சாதிக்க வேண்டியதாயிற்று.
அடுத்து, கண் புலன் உடலை விட்டுப் பிரிந்து சென்றது.
குருடர் வாழவில்லையா என்ன? செவிப்புலன் இருக்க, வாயால் பேசி, மற்ற புலன்கள் செயல்பட வாழ்ந்தது உடல்.
உடல் விட்டு அகன்ற செவிப்புலன், சிறிது காலத்திற்குப் பிறகு திரும்பியது.
"செவிப்புலன் இல்லாத வாழ்க்கை, அப்படி ஒன்றும் துன்பமாக இல்லை... செவிடராக வாழ முடியாதா என்ன?"
மூக்கு முகர் உணர்வு நீங்கிய போது,
“நுகர்ச்சி இல்லாதது ஒரு பெரிய குறையா என்ன? குழந்தை போல வாழ முடியுமே ” என்றது உடல்.
தொடு உணர்வு..... ஸ்பரிச உணர்வு...... நீங்கிய போது,
"மரக்கட்டையைப் போல வாழ முடியும். இதனால் துன்பமில்லை” என்று உடல் கூறியது.
கடைசியில் ஜீவன் வெளியேறத் தொடங்கியது. பிராணன் உடலை விட்டுப் பிரியத் தொடங்கியதுமே... மற்ற இந்திரியங்கள் தத்தம் ஜீவிதத்தை இழக்க ஆரம்பித்தன.
கண் பார்வை இழந்தது; செவி கேட்க மறுத்தது; வாய் குழற ஆரம்பித்தது; மூக்கு மோப்ப சக்தியை இழந்தது;
உடல் முழுவதும் எறும்பு கடித்தாலும் உணர்வு இல்லை, ஈ மொய்த்தாலும் தெரியவில்லை.
புலன்கள் தங்களை இழுத்துக் கொண்டு போவதை அறிந்த உடல் தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்தது. தவிப்பு....! தத்தளிப்பு....! மிகுந்த தடுமாற்றம்...!
புலன்கள் எல்லாம் ஒரு சேர இப்போது கூச்சலிட்டன:
"ஏ பிராணனே... நீ போகாதே! ஓ ஜீவனே... நீ உடலை விட்டுப் பிரிந்துவிடாதே! நீயே சிறந்தவன்... நீயே சிறந்தவன்... எங்களுடைய சிறப்புகளெல்லாம் உன்னால்தான்... நீ இல்லாமல் நாங்கள் செத்தவர்களாவோம்...!” என்று கூக்குரலிட்டன.
ஐம்புலன்களைவிட பிராணனே சிறந்தது.
ஜீவனே இந்திரியங்கள் எல்லாவற்றையும் விட மேலானது என்பதைப் புலன்கள் உணர்ந்து தெளிந்தன.
பிராணனைவிட உயர்ந்தது ஆத்மா; ஆத்மாவைவிட உயர்ந்தது வேறு எதுவுமே இல்லை என்று சாந்தோக்கியம், பிரகதாரண்யகம் ஆகிய உபநிஷதங்கள் உணர்த்துகின்றன.