ஒரு ராஜா இருந்தார். அவர், ஓர் அரசர் தன்னுடைய நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் ஒழுங்காகத்தான் செய்துகொண்டிருந்தார்.
இருந்தாலும் அவருக்கு மனநிம்மதி இல்லை, எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்னை.
அதனால் அரசருக்கு வாழ்க்கையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டது. 'என்ன செய்யலாம்?' என்று யோசித்தார்.
இதைப் பற்றி தமது நெருங்கிய நண்பர்களிடம் கலந்து பேசினார்.
அவர்கள், “பக்கத்தில் இருக்கும் ஒரு காட்டில் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்றால் ஏதாவது வழி கிடைக்கும்" என்று ஆலோசனை கூறினார்கள்.
அரசர் உடனே அங்கு புறப்பட்டுச் சென்றார். அந்தப் பெரியவரைப் பார்த்தார். அவரது காலில் விழுந்து வணங்கினார்.
“சுவாமி.... அரசாங்கத்தை நிர்வகிப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
"அப்படியானால் .... அதை விட்டுவிடேன்!" என்றார் பெரியவர்.
“நான் விலகிவிட்டால் பிறகு அரச காரியங்களை கவனிப்பது யார்?" என்று மன்னர் வினவினார்.
அதற்குப் பெரியவர், "உன் பிள்ளையிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடு” என்று கூறினார்.
"ஒப்படைத்துவிட்டு நான் என்ன செய்வது?” என்று அரசர் கேட்டார்.
“காட்டுக்கு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள். நிம்மதியாக இரு" என்று பெரியவர் தெரிவித்தார்.
பிறகும் அந்த ராஜா ஏதோ யோசனை செய்து கொண்டிருந்தார்.
"என்ன யோசனை?" என்று கேட்டார் இவர்.
“அது வந்து.... ஒன்றுமில்லை... என் மகன்... மிகவும் சிறிய பையன்... ‘என்னாலேயே தாங்க முடியாத அரச பாரத்தை அவன் எப்படி தாங்குவான்?' என்று யோசிக்கிறேன்' என்றார் அரசர்.
“அப்படியானால்... அதை என்னிடம் கொடுத்துவிடு” என்றார் பெரியவர்.
அதற்கு அரசர், “சரி” என்று ஒப்புக் கொண்டார்.
"சத்தியம் செய்து கொடு" என்று கேட்டார் பெரியவர்.
அதற்கிணங்க அரசரும், “இனிமேல் இந்த ராஜ்யம் முழுவதும் உங்களுடையது!” என்று பெரியவரிடம் சத்தியம் செய்து கொடுத்தார்.
"சரி..... ராஜ்யத்தை என்னிடம் கொடுத்துவிட்டாய். இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று பெரியவர் கேட்டார்.
"அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொஞ்சம் பொன் எடுத்துக்கொண்டு வெளிதேசம் எங்கேயாவது சென்று விடுகிறேன். அங்கே போய் ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்கிறேன்" என்றார் இவர்.
"அரண்மனைக் கருவூலம் இப்போது எனக்குச் சொந்தம்! அதிலிருந்து நீ எப்படி பொன்னோ பணமோ எடுக்க முடியும்?” என்றார் இவர்.
அதற்கு அரசர், "நீங்கள் சொல்வதும் சரிதான். அப்படியானால் நான் வேறு எங்கேயாவது சென்று, ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
"சரி... இப்போது வேலை செய்வது என்று நீ முடிவு செய்துவிட்டாய். அதை ஏன் நீ வேறு எங்கேயாவது போய்ச் செய்ய வேண்டும்? இங்கு என்னிடம் செய்யலாமே!" என்றார் பெரியவர்.
"சரி, அப்படியே செய்கிறேன். இங்கேயே ஏதாவது வேலை செய்கிறேன். தாங்கள் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள்!" என்று கேட்டார் ராஜா.
பெரியவர் வேலை கொடுத்தார். ராஜாவைப் பார்த்துச் சொன்னார்:
"இதோ பாருப்பா... நீ ஏற்கனவே ராஜாவாக இருந்து பழக்கப்பட்டவன். ஆதலால் எனக்குப் பதிலாக, நீ இந்த ராஜ்யத்தைக் கவனித்துக்கொள். உன்னுடைய வேலைக்கு உனக்குச் சம்பளம் தருகிறேன். கடமையைச் செய்ய வேண்டியது உன் பொறுப்பு. அதில் உள்ள நல்லது கெட்டதுக்கு நான் பொறுப்பு. நீ உன் வேலையை செய்துவிட்டு, மாதா மாதம் என்னிடம் வந்து சம்பளம் வாங்கிக்கொள்” என்றார் பெரியவர்.
அப்படியே செய்தார் அந்த ராஜா.
முன்பு என்ன செய்துகொண்டிருந் தாரோ.... அதையேதான் அவர் இப்பவும் செய்கிறார். ஆனால் இப்போது கவலை இல்லாமல் நிம்மதியாக இருந்தார்.... பிரச்னைகள் பெரியதாகத் தெரியவில்லை. நிம்மதியாக அவரால் தூங்க முடிந்தது. 'என்னுடைய கடமையை நான் செய்கிறேன். இந்த அரசாங்கம் என்னுடையதில்லை!' என்ற நினைப்புத்தான் அவருடைய அந்த நிம்மதிக்குக் காரணம்.
ஒரு மாதம் கழிந்த பிறகு அந்தப் பெரியவரை ராஜா சந்தித்தார்.
"புது வேலை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் பெரியவர்.
"மனநிறைவு தருகிறது. நிம்மதியாக இருக்கிறது” என்றார் ராஜா.
"அரசாங்கம் உன்னுடையது என்று நினைத்த போது அவதி. அது உன்னுடையதில்லை என்று தெரிந்ததும் நிம்மதி. பற்றில்லாமல் கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே! இதுதான் நிம்மதிக்கு வழி. இதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்படிச் செய்தேன்!" என்றார் பெரியவர்.
நாமும் அதைப் புரிந்து கொண்டால், நல்லபடியாக நிம்மதியாக வாழலாம். புரிந்துகொள்ள வேண்டுமே!