வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே திருவரங்கத்தைத்தான் குறிக்கும். இத்திருக்கோயிலினை முன்பு நம்பிள்ளையும், முதலிகளும் கவனித்து வந்தனர்.
இவர்கள் திருவரங்கத்தில் இருந்த போது, பல பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளைச் சேவிப்பர். அதோடு, நம்பிள்ளையின் மூலம் முதலியாண்டானின் திருவாய்மொழியால் பெருமாளின் பிரபாவங்களையும், உபதேசங்களையும் கேட்கவும், அவரைத் தரிசிக்கவும் காத்திருப்பர்.
நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் பக்தர்களைத் தங்க வைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.
நம்பிள்ளையின் திருமாளிகைக்கு அருகில் ஒரு பெண்மணியின் வீடு இருந்தது.
அவள் தினமும் திருக்கோயிலுக்குச் செல்வதோடு நம்பிள்ளையைச் சேவித்து, அவருடைய திருவார்த்தைகளைக் கேட்டு ஸ்ரீவைஷ்ணவ ஞானலாபம் பெற்று அதன்படி வாழ்ந்து வரலானாள்.
ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் இந்த அம்மையாரிடம் பலமுறை சென்று, ''தாயே, நமஸ்கரிக்கிறேன்! பக்தர்கள் தங்குவதற்கு நம் ஆச்சாரியரின் திருமாளிகைக்குப் பக்கத்திலிருக்கும் உங்கள் வீட்டை ஆச்சாரியர் நம்பிள்ளைக்கு சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும். இந்த வீட்டிற்குப் பதிலாக வேறு இடத்தில் மனை தருகிறேன்'' என்று வேண்டினார்.
ஆனால் அப்பெண்மணி, ''பெரியவரே! நான் எக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டை யாருக்கும் கொடுக்கமாட்டேன். நான் கண்ணை மூடும்வரை இந்த வீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் இங்குதான் வாழ்வேன்'' என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.
ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
மறுநாள் காலை அப்பெண்மணி வழக்கம் போல் நம்பிள்ளையைச் சேவித்து ஓரிடத்தில் அமரச் சென்றாள்.
அப்போது நம்பிள்ளை, ''இங்கே வாங்கம்மா'' என்றார். அவளோ ''சுவாமி, நீங்களா என்னை அழைத்தீர்கள்?'' என்று கேட்டுக் கொண்டே விரைந்து வந்து, தாள் பணிந்து வணங்கி எழுந்து நின்றாள்.
''சொல்லுங்கோ சுவாமி, நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று பயபக்தியுடன் கேட்டாள்.
''அம்மா ஆச்சாரியர் முதலியாண்டான் சுவாமிகள் இங்கு எழுந்தருள இருக்கிறார். நீ ஒருத்தி மட்டும்தானே அந்த வீட்டில் குடி இருக்கிறாய். உன் வீட்டை எங்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்குப் பதிலாக வேறோர் இடத்தில் ஒரு வீட்டை உனக்கு நாங்கள் தருகிறோம்'' என்றார்.
அந்தப் பெண்மணி, ''சுவாமி, நீங்கள் கேட்டபடி என் வீட்டைத் தருகிறேன். அதற்குப் பதிலாக தாங்கள் பரமபதத்தில் அடியேனுக்கு ஒரு மனையை விலையாகத் தர வேண்டும்'' என்று கேட்டாள்.
நம்பிள்ளை, ''அம்மா, பரமபதத்தில் மனை தர வேண்டியது பரமபத நாதனல்லவா? நான் அவனிடம் கூறி உனக்கு ஒரு வீட்டை வாங்கித் தருகிறேன்'' என்றார்.
''ஆச்சாரிய சுவாமிகளே, 'வாங்கித் தருகிறேன்' என்று சொன்னால் மட்டும் போதாது, எழுதிக் கையெழுத்திட்டுத் தர வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டாள்.
அதன்படி, ''இந்த வருஷம், இந்த மாதம், இந்தத் தேதியில் இந்த அம்மாவிற்குத் திருக்கலிகன்றி தாஸன் பரமபதத்திலே ஒரு கோல் மனை இடம் எழுதிக் கொடுத்தேன். எல்லா உலகங்களுக்கும் சுவாமியாய் இருப்பவரும், அடியேனுக்கும் சுவாமியுமான பரமபதநாதன் கிரயம் செலுத்திக் கொடுத்தருள வேண்டும்'' என்று சாசனம் எழுதித் தம்முடைய கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார்.
இது நடந்த மூன்றாம் நாளில் அப்பெண்மணி உடலை உகுத்தாள். நம்பிள்ளை சுவாமிகள் எழுதிக் கொடுத்ததுபோல் பரமபதம் சென்றடைந்தாள்.