ஒரு துறவி. கடும் விரதங்களை மேற்கொண்டவர். சூரியன் உதயமான பின் ஆகாரம் எதையும் தொடமாட்டார், நீர் கூடப் பருகமாட்டார்.
அவரது நெறி தவறாத தன்மையைப் போற்றும் வகையில் ஆகாயத்தில் ஒரு விண்மீன் தோன்றியது, அதுவும் பகல் நேரத்தில்!
அத்தகு சிறப்பு வாய்ந்த அவர் ஒரு நாள் வெளியே புறப்பட்டார்.
அருகில் இருந்த ஒரு மலையுச்சிக்கு அவர் போக வேண்டியிருந்தது.
அந்த ஊரில் இருந்த சிறுமி ஒருத்தி, தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள்.
‘‘சரி வா...’’ என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
இருவரின் பயணமும் தொடங்கியது.
சிறிது தூரம் போயிருப்பார்கள். வெயில் அதிகம் என்பதால் தாகம் எடுத்தது.
‘‘குடிக்க நீர் வேண்டும்’’ என்றாள் சிறுமி.
நீரைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார் துறவி.
‘‘நீங்களும் குடித்தால்தான் நானும் குடிப்பேன்!’’ என்றாள்.
‘‘அம்மா, நான் விரதம் இருக்கிறேன். சூரியன் உதயமான பின் எதையும் உட்கொள்வதில்லை!’’
அதைப் பற்றியெல்லாம் அந்தச் சிறுமிக்குக் கவலை இல்லை.
‘‘அவசியம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’’ என்று அடம் பிடித்தாள்.
அவருக்குச் சங்கடமாகப் போய்விட்டது.
ஒருபுறம் தம்முடைய விரதம். மறுபுறம் சிறுமியின் தாகம். எதைப் பார்ப்பது?
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
எடுத்துப் பருகினார் நீரை!
குழந்தையும் பருகிற்று.
தாகம் தணிந்தது.
தலை குனிந்தபடியே துறவி நடந்தார்.
ஆகாயத்தைப் பார்க்க அவருக்குத் துணிவில்லை.
‘‘விரதத்தை விட்டுவிட்டோம். எனவே வானில் அந்த விண்மீனும் மறைந்து போயிருக்கும்’’ என்பது அவர் எண்ணம்.
உச்சிக்குப் போன பிறகு தற்செயலாக ஒருமுறை தலை நிமிர்ந்தார். உயரே பார்த்தார்.
அங்கே இரண்டு விண்மீன்கள் இவருக்காக ஒளிவீசிக் கொண்டிருந்தன!