ஒரு காட்டில், மரத்தடியில் சாது ஒருவர் வசித்து வந்தார். அவர் எப்போதும் தம்மிடம் மூன்று கற்களை வைத்திருந்தார். தூங்கும் போது ஒன்றைத் தலையின் கீழும், ஒன்றை இடுப்பின் கீழும், மூன்றாவதைக் காலின் கீழும் வைத்துக் கொண்டு, தன் உடம்பைத் தகடால் மூடிக கொண்டு அவர் உறங்குவார்.
மழை பெய்யும் போது கல் மீது அவர் உடம்பிருக்கும்; தண்ணீர் அடியில் செல்லும். அவர் தூக்கமும் கெடாது. உட்காரும்போது மூன்று கற்களையும் ஒருசேர வைத்துக்கொண்டு அதன் மீது உட்காருவார். அடுப்பு போல் அந்தக் கற்களை வைத்துக்கொள்வதால், பாம்பு போன்றவை அவரைத் தொந்தரவு செய்யாமல் நகர்ந்து செல்லும்.
யாராவது உணவு கொண்டு வந்தால் அவர் உட்கொள்வார்.
காட்டிற்கு வந்த ஓர் அரசன் இதைக் கண்டு பரிதாபப்பட்டான்.
"ஐயோ, பாவம்! கல்லின் மீது உடம்பை வைத்துக்கொண்டு தூங்குகிறாரே, இவர் என்ன பாடுபடுவார் ? இவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இரண்டு, அல்லது மூன்று நாட்களாவது சுகமாக இருக்கச் செய்ய வேண்டும்" என்று அவன் நினைத்தான்.
"அதனால் அரசன் அரண்மனை திரும்பியதும், சாதுவை அழைத்து வருவதற்கு இரண்டு படைவீரர்களையும் ஒரு பல்லக்கையும் அனுப்பி வைத்தான்.
"வீரர்கள் சாதுவைச் சந்தித்து மன்னனின் வேண்டுகோளைத் தெரிவித்தார்கள்.
"முதலில் மறுத்த சாது பின்பு ஒருவாறு ஒப்புக்கொண்டார்.
தமது கௌபீனம், தகடு, மூன்று கற்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
'அரண்மனைக்குச் செல்பவர் எதற்காக இவற்றை எடுத்துக் கொள்கிறார்?' என்று படை வீரர்கள் யோசித்தனர்.
பல்லக்கில் ஏறிச் சாது அரண்மனையை அடைந்தார்.
"அரண்மனையில் சாதுவிற்குத் தந்தக் கட்டிலும் பட்டு மெத்தையும் தரப்பட்டன. அதைக் கண்ட சாது அந்த மெத்தையின் மீது மூன்று கற்களை வைத்தார்; தன் மீது தகட்டைப் பரப்பிக் கொண்டு உறங்கினார்.
மறுநாள் அரசன் வந்தான், “சுவாமி, எல்லாம் சரியாக இருந்ததா? ஏதாவது வேண்டுமா?' என்று வினவினான்.
'ஒரு குறையும் இல்லை' என்றார் சாது.
"அது இல்லை , சுவாமி. காட்டில் கல் மீது கஷ்டப்பட்டு உறங்கிக் கொண்டிருந்தீர்கள். இங்கு இந்த மெத்தை எல்லாம் வசதியாக இருக்குமே. அதனால் கேட்டேன்" என்றான் அரசன்.
"சாது, 'அங்கிருந்த படுக்கையேதான் இங்கேயும். இங்கிருப்பதே அங்கேயும். எல்லா இடத்திலும் எனக்கு ஒரே மகிழ்ச்சிதான். எனக்குத் தேவை எதுவும் இல்லை, குறை ஒன்றும் இல்லை" என்று பதிலளித்தார்.
"திகைத்த அரசன் கட்டிலை நோக்கினான். கட்டிலின் மீது மூன்று கற்கள் இருந்தன.
சாதுவின் காலடியில் வீழ்ந்தான். 'நீங்கள் ஒரு மகாத்மா . உங்கள் பெருமையை அறியாமல், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உங்களை நான் இங்கே அழைத்து வந்தேன். நீங்களோ எப்போதும் ஆனந்தமாக இருப்பவர். என் முட்டாள்தனத்தை மன்னித்து விடுங்கள்' என்று வேண்டி நின்றான்.
சாது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.