பஞ்சபாண்டவர்கள் ஒரு குருகுலத்தில் கல்வி கற்பதற்குச் சென்றார்கள்.
ஏற்கனவே அங்கு பதினைந்து பேர் இருந்தார்கள். இவர்களையும் சேர்த்து அந்தக் குருகுலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை இருபது ஆயிற்று.
எல்லோரும் மிகவும் ஆர்வத்தோடு அங்கு படித்துக் கொண்டிருந்தார்கள்.
சில ஆண்டுகள் கழிந்தன.
எல்லோரும் ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்தது.
குரு ஒவ்வொரு மாணவராகக் கூப்பிட்டார்.
இது வரையில் நீ என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டார்.
அவரவர்கள் தாங்கள் எழுதி வைத்திருந்ததைக் கூறினார்கள்; கற்றுக் கொண்டதைச் சொன்னார்கள்.
அங்கே படிக்க வந்த மாணவர்கள் எல்லோருமே புத்திசாலி; இளவரசர்களாக இருப்பவர்கள்.
அதனால் அவர்களிடம் அபாரமான கல்வியறிவை குரு எதிர்பார்த்தார்.
ஒரு மாணவன் வந்தான். அவன்தான் எழுதி வைத்திருந்த பூகோள பாடம் முழுவதையும் படித்துக் காண்பித்தான்.
இப்படி ஒவ்வொரு மாணவனாக வந்து படித்துக் காட்டிவிட்டுச் சென்றார்கள்.
கடைசியாக தர்மர் வந்தார். பேசாமல் நின்றார்.
அவர் தன் கையில் இருந்த ஓலைச்சுவடிக் கட்டைப் பிரிக்கவே இல்லை.
குரு தர்மரிடம்தான் அதிகமாக எதிர்பார்த்தார். ஆனால் தர்மர் பேசாமல் நின்றார்.
நீ என்ன கற்றுக் கொண்டாய்? சொல்.. ஓலைச்சுவடியைப் பிரித்துப்படி..! என்றார் குரு.
தர்மர் அசையவே இல்லை, மெதுவாகச் சொன்னார்;
ஐயா.. நான் ஒன்றே ஒன்றுதான் கற்றுக்கொண்டேன். அதுவே வாழ்க்கையில் எனக்கு மிகவும் முக்கியமான பாடமாக அமையும்! என்றார்.
என்னிடம் இவ்வளவு காலம் இருந்து படித்து... கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதானா? என்று கேட்டார் குரு.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
மற்ற மாணவர்களைவிட தர்மன் பண்புகளில் உயர்ந்தவன்.. அறிவில் சிறந்தவன்.. வயதில் முதிர்ந்தவன்... இவனே இப்படி சொன்னால் மற்றவர்களின் நிலை என்ன? அவர்கள் கெட்டுப் போய்விடுவார்களே! என்று குரு நினைத்தார்.
தர்மா... நன்றாக யோசனை செய்து பதில் சொல்... குருகுலத்தில் நீ இவ்வளவு காலம் இருந்து என்ன கற்றுக் கொண்டாய் என்று கேட்கிறேன்! என்று குரு சிறிது கோபமாகக் கேட்டார்.
தர்மர் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
அவர், இல்லை ஐயா.. இவ்வளவு காலமாக நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் ஒன்றே ஒன்றுதான்! என்று திரும்பவும் கூறினார்.
இப்போது குருவுக்குக் கோபம் வந்துவிட்டது.
அவர் கோபத்துடன், உனக்கு வெட்கமாக இல்லையா? உன்னைவிட வயதில் குறைந்தவர்கள் எவ்வளவோ பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்! எவ்வளவு விரிவாகப் படித்து காட்டினார்கள்! நீயும் ஓலைச்சுவடியில் நிறைய குறித்துத்தானே வைத்திருந்தாய் அதை ஏன் எடுத்துப் படிக்கக் கூடாது? என்று கேட்டார்.
ஐயா! நான் சொல்வது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் முக்கியமான பாடமாக ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். மற்ற எதையும் எடுத்துச் சொல்வதற்கு நான் விரும்பவில்லை! என்றார் தர்மர்.
இதைக் கேட்டதும் எல்லா மாணவர்களும் சிரித்துவிட்டார்கள்.
குருவுக்குக் கோபம் அளவு கடந்து போயிற்று.
அவர் தர்மரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்!
அதனால் தர்மரின் கன்னம் சிவந்து விட்டது... அவரது கண்கள் கலங்கின.
ஆனாலும் தர்மர் அமைதியை இழக்கவில்லை. தலைகுனிந்து நின்றார்.
தர்மரின் பிடிவாதம் முனிவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அதனால் அவர் தர்மரின் இன்னொரு கன்னத்திலும் அறைந்துவிட்டார்.
எல்லோரும் பயந்து போய் அமைதியாக நின்றார்கள்.
குரு அப்படி நீ கற்றுக்கொண்ட அந்த முக்கியமான பாடம்தான் என்ன? அதையாவது சொல்! என்று கத்தினார்.
ஐயா... அதை மட்டும் ஓர் ஓலைச் சுவடியில் தனியாகக் குறித்து வைத்திருக்கிறேன். இந்தாருங்கள் ... நீங்கள் படியுங்கள்! என்றார் தர்மர்.
குரு அதை வாங்கிச் சத்தம் போட்டு படித்தார்:
எப்படிபட்ட சோதனை ஏற்பட்டாலும், நிதானம் இழந்து கோபத்திற்கு ஆளாகக் கூடாது! - இதுதான் தர்மர் எழுதியிருந்த ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.
அந்த ஒரு விநாடியிலேயே குருவும், மற்ற மாணவர்களும், தர்மர் கற்றுக்கொண்ட வெறும் ஏட்டுச்சுரைக்காய் இல்லை... வாழ்க்கையில் பயன்படக் கூடிய மிக முக்கியமான அனுபவ பாடத்தை அவர் கற்றிருக்கிறார்! என்ற உண்மையைப் புரிந்து கொண்டார்கள்.
குருவின் கண்களில் கண்ணீர் ... அவர் தர்மரை அன்போடு கட்டித் தழுவிக் கொண்டு, தர்மா.... என்னை மன்னித்து விடு. நீ சாதாரண மாணவன் அல்ல...
நான் இது வரையில் தெரிந்து கொள்ளாத அனுபவ பாடத்தை நீ இப்போது எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டாய். நீ என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத்தான் பெருமை! என்றார்.
நிதானம் தவறக்கூடாது என்பது நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நல்ல பாடம்.