ஒருவன், அவன் மனைவி, அவன் மகன் ஆகிய மூவரும் ஒரு காட்டில் வசித்து வந்தார்கள்.
அவர்கள் மிகவும் ஏழைகள், உடைமை எதுவும் இல்லாதவர்கள்.
பகலில் மூன்று பேரும் நிர்வாணமாக இருந்து வந்தார்கள். ஆகையால் பூமியில் மூன்று குழிகள் வெட்டி அதில் கழுத்தளவு நிற்பார்கள். பகல் சென்ற பிறகு இரவு நேரத்தில் குழிகளிலிருந்து வெளியே வந்து, ஏதாவது உணவு தேடிக்கொள்வார்கள்.
ஒரு நாள் இவர்களின் நிலையைப் பார்த்த மகான் ஒருவர் மனம் வருந்தி இறைவனிடம், "இந்த அநாதைகளுக்கு நல்வாழ்வு தர வேண்டும்" என்று வேண்டினார்.
அதற்கு இறைவன், "அவர்கள் விதியில் நீங்கள் குறுக்கிட வேண்டாம்” என்றார்.
ஆனால் மகான் பிடிவாதம் செய்யவே, இறைவன் மூன்று பேருக்கும் மூன்று வரங்கள் அளித்தார்.
மகான் மூன்று பேரிடமும் இந்த நற்செய்தியைச் சொல்லி, “நல்ல வாழ்க்கை வாழுங்கள்' என்று ஆசி அருளிச் சென்றார்.
அவன் மாலையில் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றான். 'குளித்த பிறகு இறைவனிடம் செல்வம் கேட்க வேண்டும்' என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
இதற்குள் அவன் மனைவி இறைவனிடம், "நான் அழகியாக வேண்டும்” என்று கேட் டாள்.
உடனே அவள் தேவதை போன்று அழகிய இளம் பெண்ணாக மாறினாள்.
அப்போது அங்கு அரசகுமாரன் ஒருவன் வந்தான்.
அவன் அவள் அழகில் மயங்கி, அவளைத் தன் குதிரையில் ஏற்றிச் சென்றான்.
அவள் நிர்வாணமாக இருந்ததால், அரசகுமாரன் தன் அங்க வஸ்திரத்தைக் கொடுத்து அவள் உடலை மூடினான்.
இதற்குள் அவள் கணவன் வந்து அரசகுமாரன் செய்த அக்கிரமத்தைச் சகிக்காமல், "என் மனைவிக்குப் பன்றியின் முகம் வர வேண்டும்” என்று இறைவனிடம் வரம் கேட்டான்.
அவள் முகம் பன்றியாக மாறியதால், அரச குமாரன் அவளைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றான்.
அவள் மகன் வந்து நடந்ததை அறிந்து, தன் வரத்தால் தாய்க்குப் பழையபடி சுய உருவம் வர வேண்டும் என்று இறைவனிடம் வரம் கேட்டான். அதனால் அவன் தாயும் சுயநிலை அடைந்தாள்.
இவ்விதம் அவர்கள் பெற்ற மூன்று வரங்களும் வீணாயின.
மீண்டும் அவர்கள் குழிகளுக்குச் சென்று பழைய வாழ்க்கை நடத்தினார்கள்.
அவர்களின் நிலையைப் பார்த்த மகான், "விதியை மாற்ற முடியாது; இறைவனின் செயல்தான் நடக்கும்” என்ற உண்மையை உணர்ந்தார்.!!