மன்னன் ஒருவனுக்கு சொர்க்கம் எது? நரகம் எது? என்று சந்தேகம் வந்தது.
இந்த சந்தேகத்திற்கு விடை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அருகிலுள்ள காட்டிலுள்ள முனிவர் ஒருவரை நாடிச் சென்றான்.
அங்கு முனிவர் ஒரு மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்தார்.
குதிரையின் காலடிச் சத்தம் கேட்டு விழித்த முனிவர் அங்கு மன்னன் குதிரையில் நிற்பதைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தன் தவத்தைத் தொடர்ந்தார்.
மன்னனுக்கோ வியப்பு. தான் வந்திருப்பதைப் பார்த்து விட்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கி விட்டாரே...என்று கவலைப்பட்டான்.
பின்னர், “முனிவரே நரகம் என்றால் என்ன?” என்று கேட்டான்.
முனிவரிடமிருந்து பதிலில்லை.
“முனிவரே நரகம் என்பது என்ன என்று கேட்டேன்” என்றான் கோபமாக.
அதற்கும் முனிவரிடமிருந்து பதிலில்லை.
மன்னன் கோபத்துடன் வாளை எடுத்தான்.
அப்போது முனிவர் “இதுதான் நரகம்!” என்றார்.
“அடடா! முனிவர் முன்பு வாளை எடுத்து ஓங்கி விட்டோமே...?” என்று வாளை உறைக்குள் போட்டான்.
உடனே முனிவர், “இதுதான் சொர்க்கம்!” என்றார்.
மன்னனுக்கு புரிந்தது. அங்கிருந்து கிளம்பினான்.