கிராமத்தைச் சேர்ந்த சிலர், "நாம் ஒரு குழுவாகச் சென்று புனிதத் தலங்களைத் தரிசிக்க வேண்டும்” என்று முடிவு செய்தனர்.
அவர்களோடு ஒரு திருடனும் செல்வதற்கு விரும்பினான்.
அவன், “நான் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, இது வரையில் செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாக இந்தத் திருத்தலப் பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்று அந்தப் பயணக்குழுவின் தலைவனிடம் தெரிவித்தான்.
திருடன் கூறியதைக் கேட்டதும், கிராமவாசிகள் அனைவரும் அவனையும் அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர்.
'திருத்தலங்களுக்குச் செல்வது நம்மை விட திருடனுக்குத்தான் அதிக நன்மையைத் தரும்; அவனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும்' என்று பயணிகள் அனைவரும் நினைத்தார்கள்.
காசிக்குச் சென்று, பிறகு அங்கிருந்து அலகாபாத், அயோத்தி, மதுரா, பிருந்தாவனம் போன்ற திருத்தலங்களைத் தரிசிப்பதற்குப் பயணக்குழு கிளம்பியது.
வழியில் அவர்களுக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது.
அதாவது, யாராவது ஒருவர், "என்னுடைய இந்தப் பொருளைக் காண வில்லை!” என்று சொல்வார். ஆனால் அந்தப் பொருள் தொலைந்து போயிருக்காது. அது இன்னொருவர் பொருள்களுடன் சேர்ந்திருந்தது.
பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் இப்படியே நடந்து வந்தது.
'இதன் ரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்று பயணிகள் சிலர் முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் ஒரு நாள் இரவு உறங்காமல் கண் விழித்திருந்தார்கள்.
நள்ளிரவு இருட்டில், ஒரு பையிலுள்ள பொருளை எடுத்து இன்னொரு பையில் வைத்துக் கொண்டிருந்த ஒருவனை அமுக்கிப் பிடித்தனர்.
அவன் யார் தெரியுமா? மனம் திருந்தியதாகச் சொன்ன திருடன்தான் அவன்.
"உன்னுடைய இந்தச் செயலுக்கு நீ என்ன சொல்கிறாய்?” என்று அவனிடம் பயணிகள் அனைஒவரும் கேட்டனர்.
அதற்கு அந்தத் திருடன், "ஐயா, என்னுடைய பழையப் பழக்க வழக்கங்கள் காரணமாக என்னால் இரவில் தூங்க முடிவதில்லை. இரவில் மனதிற்கு வேலைக் கொடுப்பதற்காக, நான் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு திருடுவதைத் தவிர, வேறு தொழில் எதுவும் தெரியாது. அந்தப் பழக்கத்தின்படி நான் ஒருவரது பொருளை எடுத்து இன்னொருவர் பொருள்களோடு வைத்துக் கொண்டிருக்கிறேன். நல்ல வேளை, மோசமாக வேறு எதையும் நான் செய்துவிடவில்லை” என்றான்.
இப்படித்தான் ஒருவருடைய பழக்கம், அவர்களிடமிருந்து விடுபட முடியாமல், வேறு ஏதாவது செய்ய வைக்கிறது.