அரசன் ஒருவன் தன் நாட்டு அறிஞர் பெருமக்களை எல்லாம் போட்டி ஒன்றுக்கு வரவழைத்தான். எல்லோரும் வந்து கூடினார்கள்.
“எனக்கு ஒரு சிக்கல். உங்களில் யார் அதைத் தீர்த்து வைக்கிறீர்கள் என்று பார்ப்போம்'' என்று சொன்ன அரசன் அவர்களை ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றான்.
''இதோ இந்த அறையின் ஒரு புறம் மூடியிருக்கிற கதவுதான் நம் நாட்டிலேயே மிகக் கனமானதும் பெரியதுமானதாகும். என்னால் அதைத் திறக்க முடியவில்லை. உங்களில் யாராவது எந்த முறையையாவது கையாண்டு அதைத் திறக்க முடியுமா? பாருங்கள்'' என்றான்.
மிகப் பெரிய கதவைப் பார்த்தவுடனே பலர், “எங்களால் இது முடியாது, அரசே'' என்றனர்.
மற்றும் சிலர் அந்தக் கதவின் அருகே சென்று மேலும் கீழும் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியவாறு திரும்பினார்கள்.
ஆனால் ஒரே ஒருவன் மட்டும் முயற்சி செய்து கதவைத் திறப்போம் என்ற எண்ணத்தில் அதில் கைவைத்துத் தள்ளினான்.
என்ன வியப்பு! கதவின் பின்புறம் தாழ்ப்பாள் போடாததால் கதவு திறந்து கொண்டது.
இதைக் கண்ட மற்றவர்கள் நாம் முயற்சி செய்யாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்துத் தலைகவிழ்ந்தார்கள்.
அரசன் அவர்களைப் பார்த்து, 'நீங்களாக ஏதோ நினைத்துக் கொண்டு உங்களால் முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள். முயற்சி செய்த பின் முடிவுக்கு வருவதே அறிவுடைமை'' என்றான்.
கதவைத் திறந்த அறிஞனுக்குப் பரிசு தந்து அனுப்பினான் அரசன்.