துறவி ஒருவர் காட்டு வழியாக அழுது புலம்பிக்கொண்டே வந்தார்.
அந்த வழியே வந்த மூன்று நண்பர்கள், ''துறவியாரே! ஏன் புலம்புகிறீர்கள்?'' என்று கேட்டனர்.
"அந்த ஆலமரத்திற்குப் பக்கத்திலுள்ள புதரில் எமன் இருப்பதை நான் பார்த்துவிட்டேன். அவனால் இன்று எத்தனை உயிர்கள் போகப்போகின்றனவோ தெரியவில்லை. அதனால்தான் அழுதுகொண்டே வருகிறேன்'' என்றார் துறவி.
''எமனாவது, கண்ணுக்குப் புலப்படுவதாவது! இந்தத் துறவிக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்; அதனால்தான் இப்படிப் புலம்புகிறார். அந்தப் புதரில் என்னதான் இருக்கிறது, பார்த்து விடுவோம்'' என்று பேசிக்கொண்டே மூவரும் புதர் அருகே சென்றனர்.
அந்தப் புதரின் அடியில் ஏராளமான பொற்காசுகள் பளபளவென்று மின்னிக்கொண்டிருந்தன.
அதைப் பார்த்த மூவரில் ஒருவன், ''ஆ! இந்தப் பொற்காசுகளையா அந்தத் துறவி எமன் என்று சொன்னார்? அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. நாம் மூவரும் இதைச் சமமாகப் பிரித்துக் கொள்வோம். யாராவது ஒருவர் பக்கத்து ஊருக்குச் சென்று நாம் சாப்பிட உணவும் பொற்காசுகளை எடுத்துச் செல்ல மூன்று பைகளும் கொண்டு வரட்டும். இருவர் இங்கே காவலாக இருக்கலாம்'' என்றான்.
அவர்களில் ஒருவன், ''நான் பக்கத்து ஊருக்குச் சென்று உணவும் பைகளும் கொண்டு வருகிறேன்'' என்று புறப்பட்டான்.
போகும் வழியில் அவன், ''எப்படியும் அந்தப் பொற்காசுகள் அனைத்தும் நமக்கே கிடைக்க வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கும் உணவில் நஞ்சு கலந்துவிட்டால் இருவரும் இறந்துவிடுவார்கள்'' என்று சிந்தித்துக் கொண்டே போனான்.
காவலுக்கிருந்த இருவரும், ''எதற்காக இவ்வளவு பொற்காசுகளையும் மூன்று பங்காக்க வேண்டும்? அவன் உணவு கொண்டு வந்தவுடன் அவனைக் கொன்றுவிட்டு நாம் இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்வோம்'' என்று முடிவு செய்தனர்.
நஞ்சு கலந்த உணவுடன் காட்டிற்குத் திரும்பினான் அவன். தங்கள் நண்பன் என்றும் பாராமல் பொருளாசையால் இருவரும் சேர்ந்து அவனைக் கொலை செய்தனர்.
பிறகு இருவரும் அந்த உணவைச் சாப்பிட்டு அங்கேயே இறந்து கிடந்தார்கள்.
மாலைநேரம், அவ்வழியே வந்த துறவி, 'எமன் இருக்கிறான் என்று அறிவுரை கூறியும் என் பேச்சைக் கேட்காமல் இறந்து போனார்களே! இன்னும் எவ்வளவு பேரை இந்த எமன் கொல்லப் போகிறானோ!’ என்று புலம்பிக் கொண்டே தம் வழியே சென்றார்.