பக்தனின் முன் தோன்றினார் இறைவன். “உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்'' என்றார்.
“நீங்கள் எந்தச் சூழலிலும் என்னை விட்டுப் பிரியக் கூடாது. எப்பொழுதும் என்னுடனேயே இருக்க வேண்டும். அதுதான் நான் கேட்கும் வரம்'' என்றான் பக்தன்.
"அப்படியே ஆகட்டும். ஆனால் நான் உன் கண்களுக்குத் தெரியமாட்டேன்'' என்று சொல்லி மறைந்தார் இறைவன்.
அன்றையிலிருந்து, 'இறைவன் தன்னுடனே இருப்பது உண்மை தானா?' என்று அறிய விரும்பினான் பக்தன்.
அவன் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் எங்காவது நடந்து சென்றால் தரையில் இரண்டு ஜோடி காலடித் தடங்கள் தெரிந்தன. கடவுளும் உடன் வருகிறார் என்று அவன் மகிழ்ச்சி கொள்வான்.
ஆனால் அவன் துன்பமாக, சோர்வாக, சலிப்பாக இருக்கும்போது நடந்தால் தரையில் ஒரு ஜோடிக் காலடித் தடங்களே தெரிந்தன. கடவுள் தன்னுடன் வரவில்லை என்று அறிந்து கொண்டான்.
எப்பொழுது இறைவன் தனக்குத் துணையாக இருக்க வேண்டுமோ அப்பொழுது வரவில்லையே என்று வருந்தினான்.
இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தன. இறைவன் தனக்குத் தந்த வரத்தின்படி நடக்கவில்லையே என்றும் நினைத்துக் கொண்டான்.
"இறைவா! என் கண்முன்பு மீண்டும் தோன்ற வேண்டும்'' என்று வேண்டினான்.
கடவுளும் அவன் முன்பு தோன்றினார்.
"நான் மகிழ்ச்சியாக இருக்கும் சூழலில் என்னுடன் வருகிறீர். நான் துன்பப்படும்போது என்னை விட்டு ஓடிவிடுகிறீர். இது நியாயமா?'' என்று கேட்டான் பக்தன்.
"நான் எப்பொழுதும் உன்னுடன்தான் இருக்கிறேன். நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உன்னுடன் நானும் மகிழ்ச்சியாக வருகிறேன். அதனால் இரண்டு ஜோடி காலடித் தடங்கள் தெரிகின்றன. நீ துன்பமாக இருக்கும்பொழுது உன்னை நான் சுமந்துகொண்டு செல்கிறேன். தரையில் என் காலடித் தடம் மட்டுமே தெரிகிறது'' என்று விளக்கினார் இறைவன்.