தென்னாட்டின் தெற்குப் பகுதியில் ஒரு ஜமீன்தாரிடம் சமையல்காரர் ஒருவர் இருந்தார்.
பசியால் வாடிய புலவர் ஒருவர் ஜமீன்தாரிடம் சென்று யாசித்தார்.
உடனே அவருக்கு உணவளிக்கும்படி சமையல்காரரிடம் கூறினார் ஜமீன்தார்.
சமையல்காரர் புலவரை அழைத்துச் சென்று உணவறையில் அமர வைத்து, ‘‘கொஞ்சம் பொறுங்கள்! பொரியல் அடுப்பில் இருக்கு; முடித்து எடுத்து வந்திடறேன்!’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்து, ‘‘கை கால் அலம்பிட்டு வந்து அமருங்கோ; நொடியில் வர்றேன்’’ என்றவாறு புழக்கடை பக்கம் கை காட்டிவிட்டு, மீண்டும் சமையற்கட்டில் புகுந்து கொண்டார்.
புலவர் கை அலம்பிவிட்டு வந்து அமர்ந்தார்; மீண்டும் கால் மணிநேரம் கடந்தது; பசி வயிற்றைக் கிள்ளியது; மயக்கம் வருவது போல இருந்தது.
‘‘ஐயா, சமையல்காரரே...!’’ என லேசாகக் குரல் கொடுத்தார்.
விருவிருவென்று வந்த சமையல்காரர் புலவருக்கு இலைபோட்டு நீர் வைத்துவிட்டு, ‘‘எல்லாம் ஆச்சு; ஒரு அஞ்சு நிமிசம் பொறுத்துக்கணும், பூஜையை முடிச்சுட்டு சாப்பாடு காய்கறி சகிதமா வந்திடறேன்!’’ என்றவாறு இன்னொரு அறைக்குள் போனார்.
உள்ளே போனவர் பத்து நிமிடங்களாகியும் வரவில்லை; புலவர் நீரைக் குடித்துவிட்டு கோபத்துடன், ‘‘உக்கிராண சுப்பா, நீ அக்கிரஹாரத்தில் நாயாய் அலைவாயாக’’ என்று பாடிவிட்டு வெளியேறினார்.
உக்கிராணம் அறை - சமையல் அறை, சுப்பன் - சமையல்காரரின் பெயர்.
அதன்பின் நீண்ட காலத்திற்குப் பின் ஒரு நாய் அக்கிரஹாரத்தில் அலைந்து கொண்டிருந்தது. அது அந்தச் சமையல்காரனாக இருந்த சுப்பன்தான் என்று பலரும் பேசிக் கொண்டனர்.
அந்த நாயை சுப்பா என்று கூப்பிட்டு உணவளித்தனர்.
இப்படி ஒரு கதை, இன்றைக்கும் அந்தப் பகுதியில் சொல்லப்படுகிறது.