ஒரு சமயம் இப்ராகீம் என்கிற பரம சாது ஒரு பெரிய பணக்காரரிடம் வந்து சேர்ந்தார்.
அவர் பரம ஞானி என்று தெரியாத அந்தப் பணக்காரர் தன் தோட்டத்தில் தோட்டக்காரன் வேலை பார்க்கும்படி சொன்னார்.
"சரி” என்று அந்த வேலையை இப்ராகீம் ஒப்புக் கொண்டார்.
சில நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் அந்தப் பணக்காரர் சில நண்பர்களுடன் தோட்டத்திற்குள் நுழைந்தார். இப்ராகீமைப் பார்த்து நண்பர்கள் சாப்பிடுவதற்கு நல்ல மாம்பழங்கள் கொண்டு வரும்படி சொன்னார்.
இப்ராகீம் ஒரு மரத்திலிருந்து சில மாம்பழங்களைக் கொண்டு வந்து கொடுத்தார்.
ஆனால் அவை எல்லாம் புளிப்பாக இருந்தன.
அதைப் பார்த்த பணக்காரர், இப்ராகீமைப் பார்த்து, "என்னப்பா, இத்தனை நாளாக நீ இந்தத் தோட்டத்தில் வேலை செய்கிறாய், இன்னுமா எந்த மரத்துப் பழங்கள் புளிக்கும், எந்த மரத்துப் பழங்கள் இனிக்கும் என்று உனக்குத் தெரியவில்லை?” என்று கேட்டார்.
அதற்கு இப்ராகீம், "தாங்கள் தோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும்படி உத்தரவு கொடுத்தீர்களே தவிர, பழங்களைச் சாப்பிடும்படி உத்தரவு கொடுக்கவில்லை. பழங்களைச் சாப்பிட்டுப் பார்த்தால் அல்லவா எனக்கு எந்தப் பழம் புளிக்கும், எந்தப் பழம் இனிக்கும் என்று தெரியவரும்!” என்று பதில் சொன்னார்.
இந்தப் பதிலைக் கேட்ட பிறகுதான் பணக்காரருக்குத் தம் எதிரே நிற்பவர் சாதாரண தோட்டக்காரரல்ல, ஒரு பெரிய சாது என்ற உண்மை தெரிய வந்தது.