போதிஸ்தா என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் பேசிக் கொண்டேயிருப்பான். அவன் மந்திரி சுபோதா பெரிய அறிவாளி.
ஒரு நாள் அவர்கள் இருவரும் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது மரத்திலிருந்து ஒரு குயில் குஞ்சு கீழே விழுந்தது. அதன் மேலெல்லாம் இருந்த காயங்களைக் கண்டு அரசன் வேதனையடைந்தான்.
''அந்தக் குஞ்சை அதன் பெற்றோர்கள் ஏன் துன்புறுத்துகிறார்கள்?'' என்று அவன் கேட்டான்.
மன்னனுக்கு நா அடக்கத்தைப் போதிக்க இதுவே தருணம் என்று மந்திரி நினைத்தான்.
அவன் சொன்னான்:
"அரசே! இந்தக் குஞ்சை இரண்டு காகங்கள் வளர்த்தன. அது குயிலின் குஞ்சு என்பது அவற்றுக்குத் தெரியாது. காக்கைக் கூண்டில் கள்ளத்தனமாக முட்டையிடுவது குயில்களின் வழக்கம். இந்தக் குயில் குஞ்சு அடிக்கடி சதா சளசளவென்று பேசிக் கொண்டிருக்கும். இதனால் 'அது நம் இனத்தின் குரல் அல்ல; அந்தக் குஞ்சு அழையா விருந்தாளி' என்ற விஷயம் காகங்களுக்குத் தெரிந்து விட்டது. அதனால் அதைக் கூண்டிலிருந்து தள்ளி விட்டன. அடக்கமின்றிப் பேசியதால் அது இவ்வாறு தண்டனைக்கு உள்ளாயிற்று. வாயை மூடிக்கொண்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. இறகு முளைக்கும் வரை காகங்களுடன் மகிழ்ச்சியாகக் காலம் கழித்திருக்கும்"
அமைச்சன் குறிப்பாகச் சுட்டிக் காட்டிய நீதியை அரசன் புரிந்து கொண்டான். அன்று முதல் வீண் பேச்சை அவன் நிறுத்தி விட்டான்.