அரசர் தன்னுடைய தலைநகரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஓரிடத்தில் ஓர் அழகான நிலத்தைப் பார்த்தார்.
'ஆஹா! இந்த இடத்தில் நமக்கென்று ஒரு மாளிகை கட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என்று நினைத்தார்.
அரசர் நினைத்தால் அது முடியாத காரியமா?
உடனே அவர் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்று விசாரிக்கச் சொன்னார், விசாரித்தார்கள்.
அந்த இடம் ஒரு வயதான கிழவிக்குச் சொந்தமாம். அந்த அம்மாதான் அதில் ஒரு குடிசையைப் போட்டுக் குடியிருந்து கொண்டிருக்கிறார்கள்'' என்ற தகவல் அரசருக்குத் தெரிவிக்கப்பட்டது.
''சரி.. அந்த நிலத்திற்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து அதை அந்தக் கிழவியிடம் கொடுங்கள்'' என்று அரசர் உத்தரவிட்டார்.
ஆனால் அந்த மூதாட்டி, 'இது எங்கள் பூர்வீக இடம். இதை விற்கமாட்டேன்!" என்று சொல்லிவிட்டாள்.
''சரி.... இரண்டு பங்கு விலை கொடுக்கிறோம்!'' என்று அரண்மனை ஆட்கள் கூறினார்கள்.
பாட்டி அதற்கும் சம்மதிக்கவில்லை!
இதைக் கேள்விப்பட்டதும் அரசருக்குக் கோபம் வந்துவிட்டது.
அவர் ஆட்களைக் கூப்பிட்டு, ''உடனே போய் அந்தக் குடிசையைப் பிரித்து எறியுங்கள்!'' என்று கோபமாகக் கத்தினார்.
குடிசை பிரித்து எறியப்பட்டது, இடிக்கப்பட்டது.
அந்த வயதான மூதாட்டியையும் அந்த இடத்தை விட்டே துரத்தி விட்டார்கள்.
குடிசை இடிக்கப்பட்ட இடத்தில் அரசரின் விருப்பப்படியே ஓர் அழகான அரச மாளிகையைக் கட்டினார்கள்.
அந்த வயதான அம்மா ... பாவம்...' அரசரே இப்படி செய்தால் யாரிடம் போய் முறையிட முடியும்?
ஒரு ஞானி இருந்தார். அவரிடம் போய் மூதாட்டி தனக்கு நேர்ந்த கஷ்டத்தைத் தெரிவித்தாள்.
ஞானி, மூதாட்டி கூறியதைக் கேட்டு மனதில் வைத்துக்கொண்டார்.
ஒரு நாள் அந்த அரசரே இந்த ஞானி இருந்த இடத்திற்குச் சென்றார். ''சுவாமி! நான் புதிதாக ஒரு மாளிகை கட்டியிருக்கிறேன். தாங்கள் அதை ஒரு முறை வந்து பார்க்க வேண்டும்'' என்று பணிவோடு வணங்கி கேட்டுக் கொண்டார்.
ஞானியும் அதற்குச் சம்மதித்தார்.
ஒரு நாள் அரசரின் அழைப்பிற்கிணங்க ஞானி அந்த மாளிகைக்குச் சென்றார். ஆனால் அவர் சும்மா போகவில்லை, ஒரு கழுதையையும் ஓட்டிக் கொண்டு போனார்; அதோடு சில கோணிப்பைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். இவற்றையெல்லாம் பார்த்த அரசர், 'இது என்ன? மாளிகைக்கு வாருங்கள் என்று அழைத்தால், இவர் கழுதையுடன் சாக்குப் பைகளோடு வருகிறாரே!' என்று நினைத்து ஆச்சரியப்பட்டார்.
எனவே அவர் ஞானியிடம், ''எதற்காக இதெல்லாம்?'' என்று வினவினார்.
"இந்த உங்களுடைய அரச தோட்டத்திலிருந்து கொஞ்சம் மண் எடுத்துப் போகலாம் என்று நினைக்கிறேன். அதற்குத் தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார் ஞானி.
அதைக் கேட்ட அரசர், 'இது என்ன வேடிக்கையான வேண்டுகோளாக அல்லவா இருக்கிறது!' என்று எண்ணினார். இருந்தாலும், 'கொஞ்சம் மண்தானே கேட்கிறார்- எடுத்துக்கொண்டு போகட்டும்!' என்று நினைத்து 'சரி'' என்று அனுமதியும் அளித்தார்.
அந்த மகான் தோட்டத்திற்குச் சென்றார். மண்ணை வெட்டினார். கோணிப் பையில் போட்டு நிரப்பினார்.
பிறகு அவர் அரசரைப் பார்த்து, "கொஞ்சம் இங்கே வாருங்கள். இந்த மண் மூட்டையைத் தூக்கி கழுதையின் முதுகில் வைக்க வேண்டும்; கொஞ்சம் உதவி செய்யுங்கள்!'' என்று சொல்லி அழைத்தார்.
அரசரும் அதற்கு ஒப்புக்கொண்டு மண்மூட்டை இருந்த இடத்திற்குச் சென்றார். மூட்டையைத் தூக்கிப் பார்த்தார் அவரால் தூக்க முடியவில்லை , திணறினார்.
இப்போது அந்த ஞானி பேசினார்:
''அரசே இந்த ஒரு கோணிமூட்டை மண்ணையே உங்களால் தூக்க முடிய வில்லையே... அந்தக் கிழவியிடமிருந்து அநியாயமாக அபகரித்த இந்தத் தோட்டம் முழுவதையுமே சுமக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களே... அது உங்களாலே முடியுமா?'' என்று கேட்டார்.
அரசர் யோசித்தார். தன்னுடைய செயலுக்காக வருந்தினார். அந்த மூதாட்டியை உடனே வரவழைத்தார்.
அந்த அம்மையாரிடம், ''அம்மா, நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இன்று முதல் இந்த மாளிகையும் தோட்டமும் உங்களுக்குத்தான் சொந்தம்!'' என்று கூறினார்.
போகும்போது இந்த உலகத்திலிருந்து நாம் எதை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம்..? எனவே, ரொம்பவும் நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை... பிகு செய்ய வேண்டியதில்லை... அடம் பிடிக்க வேண்டியதில்லை..... கர்வப்பட வேண்டியதில்லை.