ஒரு காட்டில் ஒரு குளவி நரியிடம், ''ஏன் இப்படி பயந்து ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?” என்று கேட்டது.
''உஷ், ராஜா வருகிறார். நம்மைப் பார்த்தால் கொன்றுவிடுவார்” என்றது நரி.
''காட்டு ராஜாவா? யார் அவனை ராஜாவாக்கியது? அவர் ராஜா என்றால் நானும் ராஜாதான்” என்று குளவி பேசியதைக் கேட்டு மற்ற விலங்குகளும் அங்கே கூடின.
அங்கு வந்த சிங்கம், ''இங்கு என்ன சத்தம்?” என்று கேட்க, நரியோ தந்திரத்தால், ''ராஜா, இந்தக் குளவி உங்களைக் காட்டு ராஜாவாக ஏற்க முடியாது என்று கூறுகிறது” என்றது.
உடனே குளவி, ''உங்களுக்கு என்ன பட்டாபிஷேகமா செய்துவைத்தோம்? காட்டு ராஜா என்று நான் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் என்னுடன் சண்டையிட்டு வென்றால் நீங்கள் ராஜா என்று ஒத்துக்கொள்கிறோம்” என்று சவால்விட்டது.
சிங்கம் வேறு வழியின்றி சண்டைக்குச் சம்மதித்தது. குகைக்கு வெளியே சண்டை ஆரம்பமானது.
சிங்கம் பலமாக கர்ஜித்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சிங்கத்தின் மூக்கின் மேல் 'டொக்' என்று குளவி கொட்டியது. சிங்கத்தால் வலி தாங்க முடியவில்லை. அது எவ்வளவு முயற்சி செய்தும் அதனால் குளவியிடமிருந்து கொட்டு வாங்காமல் இருக்க முடியவில்லை.
குளவி, ''இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. என்னிடமும் சக்தியிருக்கிறது என்று ஒத்துக்கொள், உடனே இந்தச் சண்டையை நிறுத்திவிடலாம்” என்றது.
சிங்கம் அங்கிருந்து சப்தமில்லாமல் ஓடிவிட்டது. மற்ற விலங்குகளெல்லாம் பலத்த கரகோஷம் எழுப்பின. குளவியால்தான் எல்லோரும் தப்பித்தாகக் கருதி, அதனைக் கொண்டாடினர்.
எல்லோரும் பாராட்டியதும் குளவிக்குத் தலைகனம் வந்துவிட்டது. 'நானே ராஜா' என்று கூறி உயரப் பறந்தபோது, அங்கிருந்த சிலந்திவலையில் அகப்பட்டுக் கொண்டது.
சிங்கத்திற்கு உடலில் வலிமை என்றால், குளவிக்குக் கொட்டுவதிலும், சிலந்திக்கு ஒட்டுவதிலும் சக்தி உள்ளது. புகழால் தலைகனம் வந்ததால், அங்கிருந்த ஆபத்து அதற்குத் தெரியாமல் போனது.