சில இலைகள் கூடிப் பேசிக் கொண்டிருந்தன.
அங்கிருந்த வாழை இலை, ”நான் தான் அனைவரையும் விட தலைச்சிறந்தவன். யார் வீட்டில், எங்கு, எந்தச் சாப்பாடக இருந்தாலும் அனைத்து ருசியான உணவுகளை முதலில் எனக்குப் போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் நான் தான் முதன்மையானவன் என்றதாம்.
வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை சிரித்தபடி, ’அடப் பைத்தியமே , நீ என்ன முதன்மையானவன்? நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் உன்னைக் குப்பைத் தொட்டியிலல்லவா வீசி எறிகிறார்கள்” எனக் கிண்டல் செய்தது .
உன்னை விட நான் தான் முதன்மையானவன், ஏன் தெரியுமா? ‘மடத்து’ சமையல் ருசியில் அனைவரும் வயிறு நிறைய... ஏன் அதற்கு மேலும் நிறையச் சாப்பிட்டு விடுவார்கள்... மடத்துச் சாப்பாட்டின் ருசி அப்படிப்பட்டது, நெஞ்சு நிறையச் சாப்பிட்டவர்கள் அடுத்து , அது செரிக்கத் தேடுவது என்னைத்தான். வயிற்றிலிருக்கும் சாப்பாடு செரிக்க, நான் மிகமிகத் தேவை. அதனால் நான் தான் மிக முக்கியமானவன் என்று சொன்னது வெற்றிலை.
அதைக் கேட்ட கருவேப்பிலை, “என்ன நீ முதன்மையானவனா? முட்டாள்தனமாகப் பேசுகிறாய்... உணவு செரிக்க உன்னை உபயோகித்துவிட்டு சக்கையாக்கி, உன்னை “தூ’ என துப்பிவிட்டுப் போகிறார்கள், சாலையெல்லாம் உன்னால் அசுத்தம் வேறு” என்றபடி, “நான்தான் மிக மிக முக்கியமானவன், எங்கு சாப்பாடு நடந்தாலும், எந்தச் சமையல் ஆனாலும், நான் இல்லாமல் ருசிக்குமா? அனைத்துச் சமையலிலும் என் தாளிப்பு இல்லாமல் ருசிக்காது, அதனால் நான் தான் உயர்வானவன், முதன்மையானவன்” என்றது.
அதைக் கேட்ட வாழை இலையும் ,வெற்றிலையும் சேர்ந்து சிரித்தன. சமையல் ஆகும்வரைதான் உன் ஆட்டமெல்லாம்... இலைக்கு வந்ததும், முதலில் உன்னைச் சாப்பாட்டிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டுத்தானே சாப்பிடுகிறார்கள், ஒதுக்கப்பட்ட நீ என்ன முதன்மையானவன்? என்றன இரண்டும்.
இதையெல்லாம் கேட்டும் மவுனமாக இருந்த ஒரு இலையை, பக்தர் எடுத்து தெய்வத்தின் மேல் சூட்டினார் , தெய்வத்தின் மார்பில் அமர்ந்த அந்த இலை சொன்னதாம்.
”நான் துளசி, வாழை இலையே!, நீ தான் உயர்வு, முதன்மையானவன் என்று பேசினாய், அகங்காரம் கொண்டாய், அதனால்தான் நீ குப்பைத் தொட்டிக்குப் போனாய். வெற்றிலையே, உன் கர்வப் பேச்சால் நீயும் அகங்காரம் கொண்டாய் அதனால்தான் நீ தெருவிற்குப் போனாய், கருவேப்பிலையே, நீயும் அகங்காரம் கொண்டாய், அதனால் இலையின் வெளியில் தள்ளப்பட்டாய்... நான் அகங்காரத்தை விட்டேன், அதனால் அந்த பகவானின் பாதம் சேர்ந்தேன். என் பெயர்தான் துளசி” என்றது.
துளசி தொடர்ந்து, “அகங்காரத்தை விட்டதால்தான் என்றும் அந்த ஆண்டவனை அலங்கரிக்கிறேன். துளசி இல்லாத ஹரி பூஜை முழுமையாகாது, அவனுள் ஐக்கியமானேன்” என்று பணிவாகச் சொன்னது.
“நான்” எனும் அகங்காரம் (அகந்தை) ஒழிந்தால்தான், நாம் அந்த இறைவனின் திருவடியை அடைவோம், இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவோம்.