ஓர் அரசன், சேவகன் ஆகியோர் இருவரும் குதிரைகளில் வந்து கொண்டிருந்தார்கள்.
நீண்ட தூரம் வந்துவிட்டார்கள்.
அரசனுக்குத் தாகம் எடுத்தது... தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று பார்த்தார்கள்.
பக்கத்தில் வீடுகள் எதுவும் தென்படவில்லை. சிறிது தூரத்தில் ஒரு வெள்ளரிப்பழம் இருப்பது தெரிந்தது.
"அதோ, அங்கே ஒரு வெள்ளரிப்பழம் தெரிகிறது. அதையாவதுப் பறித்துச் சாப்பிடலாம்!” என்று மன்னன் கூறினான்.
உடனே, "இதோ, பறித்துக் கொண்டு வருகிறேன்" என்று கூறி சேவகன் புறப்பட்டான்.
அப்போது, “அது வெள்ளரிப்பழம் இல்லை!" என்று ஒரு குரல் கேட்டது.
"யார் அது?" என்று அவர்கள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
ஒரு பார்வையில்லாத பிச்சக்காரன்... பக்கத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தான். அவன்தான் அப்படிக் குரல் கொடுத்தது!
அரசன் பார்த்தான்: "இவனுக்கோ பார்வை இல்லை ... இவனுக்கு எப்படி அது வெள்ளரிப் பழமா, இல்லையா என்று தெரியும்? நீ போய் பறித்துக் கொண்டு வா.... இவன் ஏதோ தெரியாமல் சொல்கிறான்!" என்றான்.
சேவகன் போய் பறித்துக் கொண்டு வந்தான். மன்னன் அதை வாங்கிச் சாப்பிட்டான். வாயில் வைக்க முடியவில்லை. ஒரே கசப்பு!
அவனுக்கு ஆச்சரியம்.
மன்னன் பிச்சைக்காரனிடம், “அது எப்படி? இது வெள்ளரிப்பழம் இல்லை என்பது உனக்குத் தெரிந்தது?" என்று கேட்டான்.
அதற்குப் பிச்சைக்காரன், "ஐயா.... இது நாலு பேர் வந்து போகிற இடம்... அது வெள்ளரிப்பழமாக இருந்திருந்தால்... வருகிறவர்கள் இவ்வளவு காலம் அதை விட்டு வைத்திருக்க மாட்டார்கள்! அதனால்தான் அது வெள்ளரிப் பழமாக இருக்க முடியாது என்று நினைத்தேன்!" என்று தெரிவித்தான்.
அடுத்தபடியாகத் தண்ணீருக்கு என்ன செய்யலாம் என்று மன்னன் யோசித்தான்.
சேவகன், “அரசே! இங்கேயிருந்து நாலு பக்கமும் சாலை போகிறது... நான் இப்படியே...... கிழக்கே போகும் இந்தப்பாதை வழியாகப் போய்ப் பார்க்கிறேன். அங்கே ஏதாவது நீர் நிலைகள் இருக்கும்... தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
இப்போதும் அந்தப் பார்வையில்லாத பிச்சைக்காரன், "ஐயா... கிழக்கே சென்றீர்களானால் தண்ணீர் கிடைக்காது... தெற்கே போகும் பாதையில் சென்றீர்களானால் தண்ணீர் கிடைக்கும்!” என்றான்.
அவன் சொன்னது போலவே, தெற்கே சிறிது தூரம் சென்று பார்த்த போது, அங்கு ஒரு பெரிய குளம் இருந்தது!
"இது எப்படித் தெரியும் உனக்கு?" என்று மன்னன் பிச்சைக்காரனிடம் கேட்டான்.
"ஐயா.... எனக்குப் பாருங்கள் உடம்பில் சட்டை இல்லை... தெற்கே இருந்து வரும் காற்று குளிர்ச்சியாக இருந்தது .... அதனால் அங்கே தண்ணீர் இருக்கும் என்று நினைத்தேன்!" என்றான் பிச்சைக்காரன்.
அரசன் பார்த்தான்.... 'இப்படிப்பட்ட ஒரு ஆள் நமது அரண்மனையில் இருந்தால் மிகவும் உபயோகப்படுவான்' என்று நினைத்தான்.
எனவே அரசன், அப்படியே பிச்சைக்காரனைத் தூக்கிக் குதிரையில் வைத்து, அரண்மனைக்குக் கொண்டு போய்விட்டான்.
தினமும் ஒரு பொட்டலம் சாம்பார் சாதம் பிச்சைக்காரனுக்குக் கொடுக்கும்படி அரசன் உத்தரவு போட்டுவிட்டான்.
அப்படியே நடந்தது. அந்த அரண்மனைக்கு ஒருநாள் வைர வியாபாரி ஒருவன் வந்தான். மன்னன் அவன் கொண்டு வந்த வைரத்தையெல்லாம் வாங்கி இவனிடம் கொடுத்துச் சோதிக்கச் சொன்னான்,
இவன் வாங்கி... கையாலேயே சோதித்துப் பார்த்து அதையெல்லாம் இரண்டு பிரிவாகப் பிரித்து வைத்துவிட்டான்! “இடது பக்கம் இருப்பதெல்லாம் வைரம்... வலது பக்கம் இருப்பதெல்லாம் கண்ணாடிக்கல்” என்று கூறினான்.
"எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டான் மன்னன்.
"ஒவ்வொரு கல்லையும் எடுத்து கையில் மூடி வைத்திருந்து பார்த்தேன். நமது உடம்பிலுள்ள சூடு கல்லில் ஏறினால் அது வைரம்... ஏறவில்லையென்றால் அது கண்ணாடி... அப்படித்தான் அதைக் கண்டுபிடித்தேன்!" என்றான் பிச்சைக்காரன்.
அரசனுக்கு ஆச்சரியம்!
அவன், “சரி.... இன்று முதல் இவனுக்குத் தினமும் ஒரு பொட்டலம் தயிர்சாதமும் சேர்த்துக் கொடுங்கள்!" என்று உத்தரவு போட்டான்.
அப்படியே நடந்தது.
ஒருநாள் அந்த மன்னன் அவனிடம், "என்னை எல்லோரும் பிச்சைக்கார ராஜா என்கிறார்ளே!" என்றான்.
“அது உண்மைதான். நீ நிஜமாகவே அப்படித்தான் இருக்க வேண்டும்!" என்றான் இவன்.
“எப்படிச் சொல்கிறாய்?” என்று வினவினான் அரசன்.
அதற்கு அவன், “நீ உண்மையிலேயே பரம்பரை ராஜவம்சமாக இருந்திருந்தால், ஆரம்பத்தில்... ‘அது வெள்ளரிப்பழம் இல்லை' என்று நான் சொன்ன போதே என் திறமையைப் பாராட்டி..., உன் கழுத்திலுள்ள முத்துமாலையைக் கழட்டிப் பரிசாகக் கொடுத்திருப்பாய்... அது மட்டுமல்ல... ஒரு பொட்டலம் சாம்பார் சாதம்... ஒரு பொட்டலம் தயிர் சாதம்... இப்படி எந்த ராஜாவும் கொடுக்கமாட்டார்!" என்றான்.
அதற்கு பிறகுதான் அந்த ராஜா, “ஐயா! நான் பரம்பரை ராஜா இல்லை... உன்னைப்போல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவன் தான்... இந்த நாட்டு வழக்கப்படி அரண்மனை யானை என் கழுத்தில் மாலையைப் போட்டுவிட்டது... அதனால் நான் ராஜாவாக ஆகிவிட்டேன்! அவ்வளவுதான்!" என்று உண்மையைக் கூறினான்.