சீன நாட்டின் ஜென் புத்தத் துறவியாக இக்குவோ என்பவர் இருந்தார். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.
அந்த மடத்திற்குச் சொந்தமாகப் பெரிய தோட்டம் இருந்தது.
நாள்தோறும் அவர் சீடர்களுடன் தோட்டத்திற்குச் செல்வார். மண்வெட்டியை எடுத்து நிலத்தை ஒழுங்கு செய்வார். துடைப்பம் கொண்டு தோட்டத்தைப் பெருக்குவார்.
அவருக்கு வயது எண்பது ஆயிற்று. தள்ளாடும் அந்த முதுமைப் பருவத்திலும் தான் நாள்தோறும் செய்யும் தோட்ட வேலையை அவர் விடவில்லை.
சீடர்கள் அவரிடம், "தோட்ட வேலையை நாங்களே பொறுப்பாகச் செய்கிறோம். நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள்.
ஆனால் அவர்கள் பேச்சை அவர் கேட்கவில்லை. நாள்தோறும் தோட்டத்திற்கு வந்து உழைத்துக் கொண்டே இருந்தார்.
'’இந்த வயதில் நம் குரு எதற்காகத் துன்பப்பட வேண்டும்?
நாம் சொன்னாலும் அவர் கேட்பதில்லையே! என்ன செய்யலாம்?” என்று கேட்டான் ஒரு சீடன்.
“தோட்டத்தில் உள்ள மண் வெட்டி, கடப்பாரை போன்றவற்றை நாம் எங்கேயாவது மறைத்து வைத்துவிடுவோம். அவை இல்லாததால் நம் குரு வால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஓய்வெடுத்துக் கொள்வார்" என்றான் இன்னொரு சீடன்.
தோட்டத்தில் இருந்த கருவிகள் அவன் திட்டப்படி மறைத்து வைக்கப்பட்டன.
குரு வழக்கம் போல வேலை செய்வதற்காகத் தோட்டத்திற்கு வந்தார். மண்வெட்டி, கடப்பாரை போன்றவை இல்லாததை அறிந்தார்.
அன்றிரவு அவர் எதுவும் உண்ணவில்லை. மறுநாளும் சாப்பிடவில்லை.
இதை அறிந்த சீடர்கள் வருந்தினார்கள்: "நாம் செய்த செயலால்தான் குரு கோபம் கொண்டுள்ளார். மீண்டும் அந்தக் கருவிகளைத் தோட்டத்தில் வைத்துவிடுவோம்” என்றான் ஒரு சீடன்.
மீண்டும் அந்தக் கருவிகள் தோட்டத்தில் வைக்கப்பட்டன.
அன்று தோட்டத்திற்கு வந்து குரு வழக்கம் போலத் தன் வேலைகளைச் செய்தார்.
இரவு நேரம் வந்தது. சீடர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உண்டார்.
"நீங்கள் துன்பப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் கருவிகளை மறைத்து வைத்தோம். அதற்காக உங்கள் உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரம் இருக்கலாமா?" என்று கேட்டான் ஒரு சீடன்.
"உழைப்பவர்களுக்கே உண்ணும் உரிமை உண்டு. வேலை இல்லாததால் உணவு உண்ணவில்லை " என்று அவர் பதில் கூறினார்.