துறவி ஒருவரை இல்லறத்தில் இருப்பவன் ஒருவன் சந்தித்தான், "துறவியாரே! ஒருவன் வீடுபேறு அடைய மனைவி, மக்கள், பொருள்கள் அனைத்தையும் துறந்துதான் ஆக வேண்டுமா?" என்று கேட்டான்.
அதற்கு அவர், “பேரரசர் ஜனகர் போன்றவர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு எல்லா வசதிகளுடன் வாழ்ந்தபடியே வீடுபேறு அடைந்திருக் கிறார்கள். அதனால் வீடுபேறு அடைய ஒருவன் எதையும் துறக்க வேண்டியதில்லை” என்றார்.
இன்னொருவன் துறவியிடம் வந்து, “வீடு வாசலைத் துறக்காமலே வீடுபேறு அடைய முடியுமா?” என்று கேட்டான்.
உடனே அவர், "வீட்டில் இருந்தபடியே வீடு பேறு அடைதல் இயலாது. அப்படி வழி இருக்குமானால் முனிவர் போன்றோர்கள் எல்லாவற்றையும் ஏன் துறந்தார்கள்?” என்று கேட்டார்.
துறவியிடம் கேள்வி கேட்ட இருவரும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர்.
முதலாமவன், "துறவியார் வீடுபேறு அடைய எதையும் துறக்க வேண்டாம் என்றார்" என்றான்.
அடுத்தவன், “அப்படி இருக்கவே முடியாது. அவர் என்னிடம் எல்லாவற்றையும் துறந்தால்தான் வீடுபேறு கிடைக்கும் என்று உறுதியாகச் சொன்னார்” என்றான்.
இருவரும் தங்கள் கருத்தே துறவியின் கருத்து என்று வாதிட்டார்கள்.
உண்மையை அறிய இருவரும் துறவியிடம் வந்தார்கள்.
துறவி அவர்களைப் பார்த்து, “நான் சொன்னதாக நீங்கள் இருவர் சொல்வதும் சரியே. ஒருவருடைய உள்ளப் போக்கின்படியேதான் வழியும் இருக்கும். கேட்கும் கேள்விக்கு ஏற்ற விடைதான் கிடைக்கும். வீடு பேறு அடைய வீடு வாசலைத் துறக்க வேண்டும் என்பதும் உண்மையே. எதையும் துறக்க வேண்டாம் என்பதும் உண்மையே. இந்த இரண்டு வழிகளிலும் வாழ்ந்து நிறைய பேர் வீடுபேறு அடைந்திருக்கிறார்கள்” என்று விளக்கம் தந்தார்.